Monday, November 17, 2008

இயலாமையின் மடிப்புகளில்


இயலாமையின் மடிப்புகளில்
----------------------
ஒரு புழுவினும் கீழாய்
என்னை நிறுத்தி
காலம் நகர்கின்றது

எனது நிலங்களை
பேய்கள் அபகரிக்கும்
செய்திகளிலெல்லாம்
வந்தமருகின்றது
என் இயலாமையின்
தருணங்கள்

முகம் எங்கும் அப்பி கிடக்கிறது
போராட சென்ற
தோழர்களின் சாவு
அங்கு
அவர்கள் சாகும் பொழுதுதுகளிலும்
குளிருகின்ற இரவில்
மனைவியுடன் கலவி
கொண்டு களித்து இருந்தேன்
நானிங்கு

வீட்டின் முன்
இலைகளற்றும் மண்ணின்
பிடிப்புடன் நிமிர்ந்து
நிற்கின்றது ஒருமரம்
மண்ணற்ற என்னை
பார்பதும் இல்லை

தன் கிளையில் வந்தமரும்
குருவியிடம் சொல்லி வைத்திருந்தது
என்னிடம் பேச வேண்டாமென
துணிவற்றவனுடன் கதையெதுக்கு
என்று கேட்டது அது

வீட்டிற்குள் சென்று
உடலினை குறுக்கி
அமருகின்றேன்
இயலாமையின் மடிப்புகளில்
இருந்து பொங்கி வரும்
அழுகையை எப்படிநிறுத்துவது

-நிழலி-- (2008 - 11 - 17)

1 comment:

Anonymous said...

இலக்கிய நேர்மையுடன் எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். ஆயினும் நம்பிக்கையுடனிருப்போம். மண்ணற்றவர்களாக நாடற்றவர்களாகப் புலம்பெயர்ந்த போதே பாதி நம்பிக்கையைத் தொலைத்துவிட்டோம். எனினும் நம்பிக்கை என்றுமே தோற்றதில்லை.

யதார்த்தமான எண்ணமும் எழுத்தும் தங்களது எழுத்துக்களில் தெளிந்த ஓடையாய் சத்தமின்றி பாய்கிறது.

"முகம் எங்கும் அப்பி கிடக்கிறது
போராட சென்ற
தோழர்களின் சாவு"

மனதில் கனத்தை தந்துவிட்ட வரிகள்.