Friday, November 21, 2008

கலவியில் சோகம் அப்பும் நேரம்

கலவியில் சோகம் அப்பும் நேரம்

நான் சிறு துரும்பென உணர்கின்றேன்

உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில்
வேகின்றது
ஆகுதி ஆன எம்
பரம்பரையின்
உயிர்

என் வயது தான் உங்களுக்கும்
சில வருடம் குறையலாம்
பெண் சுகம் என்னவென்று தெரியுமா?

அல்குளின் இன்பம் தெரியுமா?
உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று?

சொல்லுங்கள் எனக்கு தியாகியாகிப்
போவதன் சுகம்
என்னவென்று
இனம் காக்க மண்
மேல் வீழ்வதன் சுகம்
என்னவென்று

பல இலட்சம் அடிமைகளின்
விலங்கு உடைக்கும் சுகம்
எனக்கு தெரியாது
பல் கோடி சதிகளின்
கண்ணி உடைக்க தெரியாது

ஆயினும் அல்குளின் சுகம்
என்னவென்று நான் சொல்வேன்

சொல்லுங்கள்
ஏன் என்னை போல
நீங்கள் இல்லை
ஏன் பெண் சுகம்
நாடவில்லை

காட்டாறுவென அழித்து
எதிரியின் படை
வரும் போது
உங்களை ஆகுதி ஆக்கினீர்கள்
ஏன் என்னை போல
தப்பி ஓடவில்லை

அது உங்களின் குற்றம் அன்றோ
என்னை போல ஓடி வந்து
கவி வடித்திட கூடாதோ

இன்னும் எத்தனை பேரை
இழக்க போரீர்கள்

புரிந்து கொள்ளுங்கள்
உங்களின் ஒவ்வொரு சாவும்
எம்மை கழு ஏற்றுகின்றது என
கேலி பண்ணுகின்றதென

எம்மால்
தோழிகளை முத்தமிட முடியவில்லை
அல்குள் பற்றி செந்நாவால்
துழாவிட முடியவில்லை

ஒவ்வொரு முறையும்
முத்தமிடும் போது
உங்கள் முகம் வந்து போகின்றது
வடிகின்ற விந்துவில்
உங்களின் முகம்
தெரிகின்றது

சொல்லுங்கள்
ஏன் என்னை போல
நீங்கள் இல்லை

பெண் சுகத்தை விட
காமத்தினை விட
சுதந்திரம் பெரிதென்று
ஏன் சொல்லுங்கள்

அதை
என் மகனுக்காயினும்
சொல்லி சாகின்றேன்
அடிமையாய் சாதல்
துயரம் என்று காட்டி
சொல்கின்றேன்

அவனாவதுஒரு நிமிடம்
அடிமையாயின்றி
வாழட்டும்
உங்களை போல

-------------------------
மாவீரர் விபரம் (2008) அறிந்து எழுதப்பட்டது ((21-Nov-2008: 01:00 AM))





2 comments:

Naren said...

தோழரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. வருந்த முடிகிறது. வேறேதும் செய்ய முடியவில்லை

Anonymous said...

Many people can feel but only a few people could express like this