Tuesday, October 21, 2008

நினைவழியா பயணம்

நீண்ட நெடிய பயணங்களின்
பின்பு அங்கே தரித்து
நின்றோம்

செம்மண்ணின் வாசனையும்
வேலி கதியால்களில் பூத்திருந்த
முள் முருக்குகளின் பூக்களும்
தொலைந்து போயிருந்த நினைவுகளில்
உயிர் தடவிற்று

கரிய நிற மாடு பூட்டி
வண்டில் ஒன்று கடந்து போனது

இருளும் நினைவும்
நிலவின்
ஒளியுடன் கலந்த இருந்த
பொழுதில் தான் நாம் அந்த வீதியில்
அமர்ந்து கொண்டோம்

நேற்றும், முந்த நாளும்
அதற்கும் முன்பாகவும்
என் தோழர்கள்
உயிர் சரிந்து வீழ்ந்த
வீதி அது

ஒவ்வொரு அங்குல
நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு
போராடி களம் வென்ற
என் தோழர்களை
தாங்கி நின்ற
வீதி அது

என் பாட்டனின், அவனதும்
பாட்டனின் காலடிகளின்
தடம் காக்க, அவனின்
பரம்பரை போராடி காத்த
வீதி அது

கல்லாய் அமர்ந்து இருந்தோம்
அதில்
வீழும் தோழருக்கு
தோள் கொடுக்க
வழியின்றி இருந்துவிட்டு
வெற்றியின் பின் விருந்து
உண்ண அமர்ந்து இருந்தோம்

மரணித்த தோழர்களின்
குருதி வழிந்த கதைகளை
கேட்பதற்கு அமர்ந்து
இருந்தோம்

அவர்களின்
மரணம் தந்த
வெற்றியின் விழுதுகளை
சுவைபதற்காக
அமர்ந்து இருந்தோம்

கரிய வானில்
கரிச்சான் குருவி
ஒன்று ஏளனமாய் சிரித்து
விட்டு பறந்தது,
தான் கூட
தோழர்கள் வலி மறக்க
இசை மீட்டகதை
சொல்லி சிரித்தது

எழுந்து மீண்டும் பயணம்
தொடரும் போது
நாங்கள்
ஒரு சிறு
குருவியை கூட
நிமிர்ந்து பார்க்கவில்லை
-----------------------------------

4 comments:

Anonymous said...

""கல்லாய் அமர்ந்து இருந்தோம்
அதில்
வீழும் தோழருக்கு
தோள் கொடுக்க
வழியின்றி இருந்துவிட்டு
வெற்றியின் பின் விருந்து
உண்ண அமர்ந்து இருந்தோம்""

முகத்தில் ஓங்கி அறைதல் என்பதன் அர்த்தம் எப்படி நோகுமோ அதேபோல மேற்கோளிட்ட வரிகள்.
நிழலி உங்கள் கவிதை சொன்னபடியே நாம் ஊர் போனோம் உறவுகளை தரிசித்தோம்.

- சாந்தி -

நிழலி said...

நன்றி சாந்தி.. உங்களின் பாராட்டும், வார்தைகளும் உற்சாகம் தருகின்றன


-நிழலி-

sukan said...

//எழுந்து மீண்டும் பயணம்
தொடரும் போது
நாங்கள்
ஒரு சிறு
குருவியை கூட
நிமிர்ந்து பார்க்கவில்லை//

பல லட்சம் மக்களின் நிலை இது தானா என்று கேட்டால் ஆம் என்பதே நேர்மையான பதில். எம்மவரின் இயலாமைக்கு எத்தனை ஆடை கட்டினாலும் அது அவிழ்ந்து அம்மணமாக நிற்கும்.

உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும். நாலு பேர் மனசாட்சயை தொட்டாலும் பெரும் நன்மையே.

Anonymous said...

Gentleman or Lady will you remove your ICON nizhli photo looks like nirvaannam. Please remove insert with other good photograph