Tuesday, December 30, 2008

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்: 3

புத்தகத்தின் பெயர்: குழந்தை போராளி
சுய சரிதம், எழுதியவர் : சைனா
தமிழாக்கம்: தேவா
வெளியீடு:கருப்பு பிரதிகள்

அண்மைக் காலங்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு வாசிப்பு என்றால் அது இந்த சுயசரிதம் தான். ஒன்பது வயதிலேயே குழந்தை போராளியாக்கப்பட்ட பெண்ணான 'சைனா கெய்ரெற்சியின்' பறிக்கப் பட்ட குழந்தை பருவத்தின் துயரம் எனக்குள் இட்டுச் செல்லும் வலிகள் ஏராளம். 'சைனா' வின் சரிதத்தையும் அவ்வாறு குழந்தை போராளியாக மாறிய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளையும், போராளியாக்கப் பட்டபின் ஏற்பட்ட கடும் பாலியல் துன்புறுத்தல்களையும், ஊட்டப் பட்ட போர் வெறியையும் புரிந்து கொள்ளும் போதுதான் ஏன் எல்லா மனித உரிமைவாதிகளும் அமைப்புகளும் குழந்தைகள், சிறுவர்கள் போராளியாக்கப் படுவதை கடுமையாக எதிர்கின்றன என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது

எமது போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்திகரிக்க பயன்படும் ஆதாரங்களில் ஒன்று சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பதாகும். அப்படி சேர்க்கப் பட்ட சிறுவர்களுக்கு நடக்கும் பயங்கரங்கள் பற்றி உலகம் ஏற்கனவே அவ்வாறு சேர்க்கப் பட்ட சிறுவர்களின் துயர் மிகுந்த கதைகளை கேட்டு அறிந்து வைத்திருப்பதாலாகும். ஆனால் எமது சூழலும், இயக்க நடை முறைகளும், போராட தூண்டும் அரச பயங்கரவாதமும் முற்றிலும் வேறு வேறானவை என்பதை இந் நூல் வாசித்து முடிக்கும் போது என்னால் உணர முடிகின்றது. உலகம் ஒரே வகையான வர்ணத்தினை எல்லா இடமும் பூச முற்படுவதன் பின்னணி, சிறுவர்களை போராளியாக்கும் அரசியலையும், அரசுகளையும் என்றுமே அவை ஆதரித்து வந்தமையாலாகும்.

'சைனா கெய்ரெற்சி' (இனி இவரை 'சைனா' என்றே அழைக்கின்றேன்) உகண்டாவில் 1976 இல் 'துற்சி' இனக் குழுமத்தில் பிறக்கின்றார். அம்மாவை அப்பா சைனா பிறந்த பின் துரத்தி அடிக்கின்றார். தாயன்பு கிடைக்காது வளரும் சைனா கொடுமையும், சித்திரவதைகளும் செய்யக் கூடிய பாட்டியினால் ஆரம்ப காலங்களில் வளர்க்கப்படுகிறார். தந்தையாலும் பாட்டியாலும் மோசமான சித்திரவதைகளுடன் வளர்க்கப் படும் காலங்களில் பல தடவை கைகளும் கால்களும் அடி உதைகளின் மூலம் முறிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுதும் பரவிக் கிடக்கும் பெண் அடிமைத்தன முறைகளில் இவை மிக சாதாரண நிகழ்வாக போகின்றன. தந்தை இன்னொரு பெண்ணை மணம் முடிக்கின்றார். இப்பொது பாட்டியிடம் இருந்து தந்தையின் புதிய மனைவிற்கு 'சைனா' வை வளர்க்கப் படும் பொறுப்பு மாறுகின்றது, ஆனால் அதே சித்திரவதைகளும் அடி உதைகளும் தொடர்கின்றன். சைனா ஒன்பதாவது வயதில் தன் உண்மையான தாயை தேடி தனியே பயணம் போகின்றார். போகும் போது வழி தவறுகின்றது. ஈற்றில் போராளிகளின் பயிற்சி முகாமை தவறுதலாக சென்றடைகின்றார்

அது உகண்டாவில் 'இடி அமீன்' காலத்தின் அடுத்த கட்டம். மில்ரன் ஒபாடேக்கு (சனாதிபதி) எதிராக `NRA (National Resistance Army) என்ற இயக்கம் துற்சிகளின் ஆதரவை பெற்று கிளர்ச்சி செய்கின்றது. அரசு அமைக்கும் அதிகாரம் தமக்கு வேண்டும் என்று இவ் அமைப்பு போரிட்டது. அதில் தான் `சைனா`உள் வாங்கப் படுகின்றார். குறுகிய ஆயுதப் பயிற்சியின் பின்னர் நேரடியாக கள முனைக்கு அனுப்பபடுகின்றார். அப் படையின் (ண்றா) தளபதிகள் தமக்கு முன்பாக குழந்தை படையணிகளையே அனுப்புகின்றனர். முற்றிலும் குழந்தைகளாலான படைகள் தான் கடும் பலத்துடன் இருக்கும் உகண்டாவின் படையணிகளுடன் போரிடுகின்றனர். நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். சண்டையின் பின் தளபதிகளால் போர் வெறியூட்டப்படுகின்றனர். கைது செய்யப் பட்ட எதிரிகளை அடித்தே கொல்லும் பணிக்கு குழந்தைகளையே பயன்படுத்துகின்றனர். தளபதிகள் படையணியில் இருக்கும் பெண் குழந்தைகளுடன் சல்லாபிக்கின்றன்றனர். தமக்கு விரும்பிய குழந்தை பெண் போராளிகளை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகின்றன����். பாலியல் வல்லுறவு படுத்துகின்றனர். சைனாவும் பலதடவை பலரால் வல்லுறவாக்கப்படுகின்றார்..ஆம் ஒன்பது வயது குழந்தை மீது பல தடவை பலரால் அவளை இணத்து கொண்ட்ட (NRA) அமைப்பின் தளபதிகளால், கப்டன்களால் ஏனைய பெண் சிறு போராளிகள் போன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றார்

NRA தலைநகர் மீது படையெடுத்து வெல்கின்றது. சைனா NRAஅமைப்பில் தொடர்கின்றார். `கசினி` என்னும் தளபதியின் கீழ் பணியிற்கு அமர்த்தப் படுகின்றார். அவர் `சைனாவை`பல நூற்றுக்கணக்கான தடவை வல்லுறவுக்குள்ளாக்கின்றார். சைனா நாட்டை விட்டு தப்ப முயல்கின்றார். அப்படி தப்பி தென்னாபிரிக்காவுக்கு ஓடுகின்றார்.இந்த வேளையில் அவருக்கு ஒரு மகனும் இருக்கின்றார் (`சைனா`வின் வயது 12 அல்லது 13). அவ் மகனை உகண்டாவில் விட்டு விட்டு ஓடுகின்றார். தென்னாபிரிக்காவில் உகண்டாவின் புலனாய்வு பிரிவினால் கடத்தப் படுகின்றார். முதுகில் பெரிய `டிரில்லர்`ரால் துளையிடப் படுகின்றார். பெரும் சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் அங்கிருந்தும் தப்பி ஐக்கிய நாடுகளின் அகதிகள் தாபனத்தில் தஞ்சம் அடைகின்றார். ஈற்றில் அவர்களின் உதவியுடன் சுவிசலார்ந்துக்கு போய் சேருகின்றார். கடும் மன அழுத்ததினால் பீடிக்க பட்ட நிலையில் வாயிலிருந்து வார்த்தைகள் கூட உச்சரிக்க முடியாத நிலையில் சுவிஸ் போய் சேருகின்றார். அங்கு கடும் சிகிச்சை அளிக்கப் படுகின்றது. அவரின் பிரதான மருத்துவர் `உனது எண்ணங்களை எழுது..அப்படி எழுதினால் உன் மன அழுத்தம் குறையும் என்கிறார். `சைனா`தன் சுய சரிதையினை எழுத ஆரம்பிக்கின்றார்

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும் 2

1. லியோ டால்ஸ்டாய் எழுதிய உன்னத நாவல் ``போரும் அமைதியும்``(War and Peace by Leo Tolstoy)

(ரஷிய நாவல். டி. எஸ் சொக்கலிங்கம் அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டு சீதை பதிப்பகத்தால் (தமிழ் நாடு) 3 பெரும் பாகங்களாக வெளியிடப் பட்டது. பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து நான் வாங்கினேன்)

உலகின் முக்கிய முதல் 100 நாவல்களுக்குள் இடம்பெறுகின்ற நாவல் இது. போர் பற்றியும் அதன் அரசியல் இராணுவ பரிமாணங்கள் பற்றியும் மிக ஆழமாக பேசுகின்றது. இதில் நான் ஆச்சரியப் படும் விடயம் என்னவென்றால் சில போர் காட்சிகளும் போரியல் முறைகளும் இன்று வன்னியில் இடம்பெறும் யுத்ததினை அப்பட்டமாக நினைவூட்டுவதே

அலெக்ஸான்டருக்கும் நெப்போலியனுக்கும் இடையிலான போர்தான் முக்கிய கருப்பொருள். அதனை பல பாத்திரங்களுனூடாக டால்ஸ்டாய் நகர்த்தி செல்கின்றார்.எனக்கு அதில் வரும் சில கதா பாத்திரங்கள் நான் வாழும் வரை மறக்க முடியாத நபர்களாக என் மனதில் இருப்பர். பீயர் எனும் பாத்திரமும் நடாஷா எனும் பாத்திரமும் தான் இக் கதையின் முக்கிய மனிதர்கள். இவர்கள் வெறும் கற்பனை கதாப் பாத்திரங்கள் அல்ல. டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் சந்தித்த மனிதர்களில் இருந்தும் தன் உறவினர்களிடம் இருந்தும் சில குணாதிசயங்களை கொண்டும் தன் பாத்திரங்களை வடிவமைத்துள்ளார்

யுத்தம் என்பது என்ன? ஒரு யுத்ததினை தவிர்க்க கூடிய ஆயிரம் வழிமுறைகள் இருந்தும் அது ஏன் தவிர்க்க பட முடியாததாகின்றது. அதில் தனி மனிதர்களின் (தலைவர்களின்) சில விசேட குணாம்சங்கள் எப்படி செல்வாக்கு செலுத்துகின்றது, அவர்கள் காலத்தாலும் அக் காலகட்டத்தில் வாழும் மக்கள் கூட்டத்தாலும் எப்படி உருவாக்கப் படுகின்றனர். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று இரு சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கல் ஒரு நீண்ட வரலாற்று பின்னனியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். அது போலத்தான் அதன் முடிவும்... டால்ச்ஸ்டாய் யுத்தம் ஒன்றின் பல பரிமாணங்களையும் ஆழமாக நோக்குகின்றார்..

போரும் அமைதியும் நாவல் போர் பற்றிய ஒரு பெரும் நாவலாக மட்டும் அன்றி, 1800 களில் இடம்பெற்ற அய்ரோப்பிய யுத்ததினை பற்றிய விமர்சன பார்வை கொண்ட ஒருவரலாற்று பதிவாக கூட அமைத்திருக்கின்றது. நெப்போலியனதும், அலெக்ஸ்சாண்டரினதும் இடையிலான யுத்தம் ஏன் இடம்பெற்றது, எப்படி இடம்பெற்றது என முன்பு எழுதிய பல ஆய்வாளர்களினது, வரலாற்றாசிரியர்களினது கண்டுபிடிப்புகளையும், அவர்களினது விமர்சனங்களையும் மீள் பார்வைக்குட்படுத்துகின்றது, டால்ஸ்டாயின் புதிய விமர்சனங்களே பிற்காலத்தில் பல வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது முக்கியமான விடயம்.

போரும் அமைதியும் வெறும் யுத்தம் பற்றிய ஒரு நாவல் அல்ல. அது பொதுவாக மனிதர்களின் பல்வேறுபட்ட குணாதிசயங்களை, உணர்ச்சிகளை, மனவோட்டங்களை எந்த 'புனித' பார்வைகளும் இன்றி மிக துல்லியமாக டால்ஸ்டாயால் காட்டப்படுகின்ற ஒரு காவியம். இன் நாவலின் பல கதாபாத்திரங்களின் செயல்களும் எண்ணங்களும் ஒவ்வொரு வாசகரும் 'டால்ஸ்டாய் எப்படி எனது உணர்வுகளை கூட எழிதினார்' என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருப்பது தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு பெண்ணிலும் டால்ஸ்டாயின் பாத்திரங்களான "நடாஷாவும்' 'கெலனும்' கலந்து இருப்பர். அதே போன்று ஒவ்வொரு ஆணிலும் 'பீயரும்' , 'அன்றுவும்' கலந்து இருப்பர். நான் முதல் சொன்னது போல நான் சாகும் வரைக்கும் இவர்களின் நினைவு என்னில் கலந்தே இருக்கும். இவர்கள் எனது ஊரிலிருந்து பல்லாயிரக் கணக்கான கிலோ மீற்றருக்கு அப்பால், இரு நூற்றாண்டின் முன் வாழ்ந்தவர்களாயினும் அவர்களில் என்னை கூட ( அல்லது எந்த வாசகனையும்) காணமுடிகின்றது என்பதே இந் நாவலின் சர்வதேசிய தன்மையும் வெற்றியும்போரும் அமைதியும் பற்றிய என் குறிப்பு நிறைவடைகின்றது

சில தகவல்கள்இணையத்தில் ஆங்கில மொழியில் வாசிக்க: http://www.online-literature.com/tolstoy/war_and_peace/இன் நாவலை பற்றிய Wiki பக்கம்: http://en.wikipedia.org/wiki/War_and_Peace

*******************************இவ் நாவலை முடிந்தால் நீங்களும் படித்து பாருங்கள். இன்று எம் மண்ணில் நடக்கும் யுத்ததிற்கும், புலிகளால் காட்டப்படும் 'பொறுமை' க்கும் கூட இதில் பெரும் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இவ் நாவல் அதனால் மட்டுமே வாசிக்க வேண்டிய நாவலாக அமைந்து விடவில்லை. அதில் வரும் பாத்திரங்கள், அவர்களின் மனவோட்டங்கள் எந்தளவுக்கு ஒவ்வொரு மனிதரிலும், உங்களிலும் பிரதிபலிப்பதை காண முடியும். பல சிக்கலான வாழ்வின் துயர் மிகு சம்பவங்களினையும், சந்தோசமான தருணங்களையும் அடி ஆழம் வரை அலசக்கூடிய ஒரு பார்வையின் தொடக்க புள்ளியை இன் நாவல் உங்களுக்கு நிச்சயம் தரும்

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்

எனக்கு ஐந்து வயசு இருக்கும், அப்பாவுக்கு இடம் மாற்றலாகி நாங்கள் எல்லாரும் குருணாகலுக்கு போய் 83 கலவரம் வரை வசிக்க வேண்டி வந்தது. அப்பா அரசாங்க உத்தியோகம் என்பதால் அங்கு அழகான ஒரு `குவார்ட்டஸ்`தந்து இருந்தார்கள் அந்த வீடு அமைந்து இருந்த இடம் குருணாகலின் முக்கியமான அரச வேலைத்தளங்கள் இருக்கும் இடம். மருந்துக்கும் கூட அப்பகுதியில் என்னுடன் விளையாட தமிழ் குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. சிங்களம் தெரியாத வயது அது. ஆனால் எம் வீட்டின் அதே வளவில்தான் குருணாகலின் மத்திய நூல் நிலையம் அமைந்து இருந்தது. வீட்டில் இருந்து 10 அடிகள் எடுத்து வைத்தால் நூலகத்தின் உள்ளே நுழையலாம். பள்ளிக்கூடம் விட்டு வந்தபின் விளையாட யாரும் இல்லாதபடியால நூலகம் மட்டும் தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. அப்பவெல்லாம் நிறைய தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள், இந்திய சஞ்சிகைகள் எல்லாம் இருக்கும் (83 இன் பின் தமிழ் பத்திரிகைகள் தவிர மற்ற எல்லா தமிழ் புத்தகங்களயும் நிப்பாட்டி விட்டார்கள்)...அன்று தொடங்கிய வாசிக்கும் பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து இன்று வரை நிலைத்து விட்டது, என்ற அப்பாவும் நிறைய வாசிப்பார். குடும்பத்தில் அனேகமாக எல்லாரும் ஓரளவுகாயினும் வாசிப்பினம். சின்ன வயசில ஆரு முதல் வாசிக்கிறது என்று எனக்கும் அக்காவுக்கும் சண்டை கூட வந்திருக்கு.

83 இன் பின் யாழ்ப்பாணம் போனபின் என்னை ஆச்சரியப்படுத்திய முக்கியமான விசயம் என்னவென்றால் அங்கு நிறைய நூலகம் இருந்தது தான். சில இடங்களில் நூலகம் என்றும் சில இடங்களில் வாசிகசாலை என்றும் இருக்கும். அனேகமாக என் ஊரில் இருந்த எல்லா நூலகத்திலும் நான் உறுப்பினனாக இருந்து இருக்கிறன். அதே போல நான் படித்த புனித பரியோவான் பள்ளிக்கூடத்திலும் ஒரு நல்ல நூலகம் இருந்தது. அங்கு புத்தகங்கள் எடுக்க ஒரு சின்ன அங்கத்துவ அட்டை எடுக்க வேண்டும். அதில் கிட்டத்தட்ட 72 புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கலாம். நான் அனேகமாக ஒரு வருசத்தில் 3 அங்கத்துவ அட்டையாவது முடித்து விடுவன். அங்கு (நூலகத்தில்) ஒரு அழகான பெண்மணி நூலகராக இருந்தா. யாழ் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரின் மகள் என்று சொல்லுவினம். ஆனால் அவாவை `கத்தரிக்கா` என்று பட்டப் பெயர் வைத்துதான் கூப்பிடுவினம். நல்ல சிகப்பான ஒரு பெண் அவா. நான் அடிக்கடி நூலகத்தில் இருப்பதால் என்னை அவவுக்கு அப்ப நல்லா பிடிக்கும். விடுமுறை விடும் காலத்தில் புத்தகங்களை மீள அடுக்கி, பைண்ட் செய்யும் வேலைகளில் எல்லாம் உதவியிருக்கிறன். அப்படி உதவினது புத்தகங்கள் மீதான பற்றுதலாலா அல்லது அந்த நூலகரின் மீதான ஈர்ப்பாலா என இப்பவும் சரியாக சொல்ல தெரியேல. அப்பவெல்லாம் ராஜேஷ் குமாரின் நாவல்களும் மர்மக் கதைகளும் தான் எனது விருப்பமான தெரிவுகள் அதே போல விடுதலை புலிகளினதும் ஏனைய விடுதலை இயக்கங்களினது பிரசுரங்களும் வெகுவாக கவர்ந்தான

கொழும்புவிற்கு வந்த பின் என் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கிற்று. அதே நேரம் எம் விடுதலை போர் மீதான தீவிரமான பார்வையும், விடுதலை இயக்கங்கள் மீதான எனது அவதானங்களும் வளர வளர ராஜேஷ் குமார் நாவல்கள் போன்றன என்னை விட்டு அகலத் தொடங்கின. அதே காலகட்டத்தில் எனக்கு அறிமுகமான `சரிநிகர்` பத்திரிகை என் வாசிக்கும் போக்கில் பெரும் மாறுதலை கொண்டுவந்தது. அதன் ஆசிரியர் பீடத்தில் இருந்த சிவகுமாரினுடனான சினேகிதம், டி.சிவராம் உடனான பழக்கம் (சிவராம்தான் என்னை ரஷ்ஷிய நாவல்கள் வாசிக்க தூண்டினார் என நினைக்கின்றேன். என்னைக் காணும் நேரமெல்லாம் வாத்சாயனரின் காம சாத்திரத்தினை தமிழில் முழுமையாக மொழி பெயரடா என்று பகிடியாக சொல்வார். அவர் கொல்லப்பட முன் இறுதியாக சந்திக்கும் போதும் அவர் இப்படி சொல்லி பெரிதாக சிரித்தார்) எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தது. மத்திய கிழக்குக்கு வேலை வாய்பு பெற்று போனபின் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கும் பழக்கம் ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் கொழும்பிற்கு வரும் போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் நிறைய வாங்குவேன். அந்த பழக்கம் இப்போது கனடா வந்த பின்னும் தொடருகின்றது, கனடா வந்த பின் பல புத்தக கடைகளிலும் தேடி அலுத்தபின் இணையம் மூலம் ஓர்டர் கொடுத்து வாங்குகின்றேன். இது தொடர்பாக யாழிலும் ஒரு திரி ஆரம்பித்து கனடாவில் எங்கே புத்தகம் வாங்கலாம் என கேட்டு இருந்தேன்.
-------------------------------

இப்படியாக நான் வாசித்த வாசிக்கும் புத்தகங்கள், நாவல்கள் பற்றி கொஞ்சம் எழுதலாம் என நினைக்கின்றேன். இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. இவை சிறு குறிப்புகளே. நீங்களும் நான் வாசித்த அல்லது வாசிக்கும் புத்தகங்களை வாசித்து இருந்தால் என்னுடன் இந்த திரியில் பகிருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்