Tuesday, December 30, 2008

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும்

எனக்கு ஐந்து வயசு இருக்கும், அப்பாவுக்கு இடம் மாற்றலாகி நாங்கள் எல்லாரும் குருணாகலுக்கு போய் 83 கலவரம் வரை வசிக்க வேண்டி வந்தது. அப்பா அரசாங்க உத்தியோகம் என்பதால் அங்கு அழகான ஒரு `குவார்ட்டஸ்`தந்து இருந்தார்கள் அந்த வீடு அமைந்து இருந்த இடம் குருணாகலின் முக்கியமான அரச வேலைத்தளங்கள் இருக்கும் இடம். மருந்துக்கும் கூட அப்பகுதியில் என்னுடன் விளையாட தமிழ் குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. சிங்களம் தெரியாத வயது அது. ஆனால் எம் வீட்டின் அதே வளவில்தான் குருணாகலின் மத்திய நூல் நிலையம் அமைந்து இருந்தது. வீட்டில் இருந்து 10 அடிகள் எடுத்து வைத்தால் நூலகத்தின் உள்ளே நுழையலாம். பள்ளிக்கூடம் விட்டு வந்தபின் விளையாட யாரும் இல்லாதபடியால நூலகம் மட்டும் தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. அப்பவெல்லாம் நிறைய தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள், இந்திய சஞ்சிகைகள் எல்லாம் இருக்கும் (83 இன் பின் தமிழ் பத்திரிகைகள் தவிர மற்ற எல்லா தமிழ் புத்தகங்களயும் நிப்பாட்டி விட்டார்கள்)...அன்று தொடங்கிய வாசிக்கும் பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து இன்று வரை நிலைத்து விட்டது, என்ற அப்பாவும் நிறைய வாசிப்பார். குடும்பத்தில் அனேகமாக எல்லாரும் ஓரளவுகாயினும் வாசிப்பினம். சின்ன வயசில ஆரு முதல் வாசிக்கிறது என்று எனக்கும் அக்காவுக்கும் சண்டை கூட வந்திருக்கு.

83 இன் பின் யாழ்ப்பாணம் போனபின் என்னை ஆச்சரியப்படுத்திய முக்கியமான விசயம் என்னவென்றால் அங்கு நிறைய நூலகம் இருந்தது தான். சில இடங்களில் நூலகம் என்றும் சில இடங்களில் வாசிகசாலை என்றும் இருக்கும். அனேகமாக என் ஊரில் இருந்த எல்லா நூலகத்திலும் நான் உறுப்பினனாக இருந்து இருக்கிறன். அதே போல நான் படித்த புனித பரியோவான் பள்ளிக்கூடத்திலும் ஒரு நல்ல நூலகம் இருந்தது. அங்கு புத்தகங்கள் எடுக்க ஒரு சின்ன அங்கத்துவ அட்டை எடுக்க வேண்டும். அதில் கிட்டத்தட்ட 72 புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கலாம். நான் அனேகமாக ஒரு வருசத்தில் 3 அங்கத்துவ அட்டையாவது முடித்து விடுவன். அங்கு (நூலகத்தில்) ஒரு அழகான பெண்மணி நூலகராக இருந்தா. யாழ் பல்கலைகழக பேராசிரியர் ஒருவரின் மகள் என்று சொல்லுவினம். ஆனால் அவாவை `கத்தரிக்கா` என்று பட்டப் பெயர் வைத்துதான் கூப்பிடுவினம். நல்ல சிகப்பான ஒரு பெண் அவா. நான் அடிக்கடி நூலகத்தில் இருப்பதால் என்னை அவவுக்கு அப்ப நல்லா பிடிக்கும். விடுமுறை விடும் காலத்தில் புத்தகங்களை மீள அடுக்கி, பைண்ட் செய்யும் வேலைகளில் எல்லாம் உதவியிருக்கிறன். அப்படி உதவினது புத்தகங்கள் மீதான பற்றுதலாலா அல்லது அந்த நூலகரின் மீதான ஈர்ப்பாலா என இப்பவும் சரியாக சொல்ல தெரியேல. அப்பவெல்லாம் ராஜேஷ் குமாரின் நாவல்களும் மர்மக் கதைகளும் தான் எனது விருப்பமான தெரிவுகள் அதே போல விடுதலை புலிகளினதும் ஏனைய விடுதலை இயக்கங்களினது பிரசுரங்களும் வெகுவாக கவர்ந்தான

கொழும்புவிற்கு வந்த பின் என் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கிற்று. அதே நேரம் எம் விடுதலை போர் மீதான தீவிரமான பார்வையும், விடுதலை இயக்கங்கள் மீதான எனது அவதானங்களும் வளர வளர ராஜேஷ் குமார் நாவல்கள் போன்றன என்னை விட்டு அகலத் தொடங்கின. அதே காலகட்டத்தில் எனக்கு அறிமுகமான `சரிநிகர்` பத்திரிகை என் வாசிக்கும் போக்கில் பெரும் மாறுதலை கொண்டுவந்தது. அதன் ஆசிரியர் பீடத்தில் இருந்த சிவகுமாரினுடனான சினேகிதம், டி.சிவராம் உடனான பழக்கம் (சிவராம்தான் என்னை ரஷ்ஷிய நாவல்கள் வாசிக்க தூண்டினார் என நினைக்கின்றேன். என்னைக் காணும் நேரமெல்லாம் வாத்சாயனரின் காம சாத்திரத்தினை தமிழில் முழுமையாக மொழி பெயரடா என்று பகிடியாக சொல்வார். அவர் கொல்லப்பட முன் இறுதியாக சந்திக்கும் போதும் அவர் இப்படி சொல்லி பெரிதாக சிரித்தார்) எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தது. மத்திய கிழக்குக்கு வேலை வாய்பு பெற்று போனபின் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கும் பழக்கம் ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் கொழும்பிற்கு வரும் போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் நிறைய வாங்குவேன். அந்த பழக்கம் இப்போது கனடா வந்த பின்னும் தொடருகின்றது, கனடா வந்த பின் பல புத்தக கடைகளிலும் தேடி அலுத்தபின் இணையம் மூலம் ஓர்டர் கொடுத்து வாங்குகின்றேன். இது தொடர்பாக யாழிலும் ஒரு திரி ஆரம்பித்து கனடாவில் எங்கே புத்தகம் வாங்கலாம் என கேட்டு இருந்தேன்.
-------------------------------

இப்படியாக நான் வாசித்த வாசிக்கும் புத்தகங்கள், நாவல்கள் பற்றி கொஞ்சம் எழுதலாம் என நினைக்கின்றேன். இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. இவை சிறு குறிப்புகளே. நீங்களும் நான் வாசித்த அல்லது வாசிக்கும் புத்தகங்களை வாசித்து இருந்தால் என்னுடன் இந்த திரியில் பகிருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

No comments: