Sunday, February 8, 2009

மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன

Sunday, February 8, 2009

மேய்பனை தேடி வல்லூறுகள்
அலைகின்றன
மேய்பனுக்காக ஆடுகள்
கொல்லப் படுகின்றன

ஆடுகள் கன்றுக் குட்டிகள்
பாலருந்துகையில்
கொல்லப் பட்டன
கன்றுக் குட்டிகள் துள்ளி
விளையாடுகையில் கால்கள்
துண்டிக்கப் பட்டு
தெருவில் அலைந்தன

மேய்பனி்ன் நிழலில்
பதுங்க முற்பட்ட ஆடுகள்
அறுக்கப் பட்டு கடைகளில்
விற்கப் பட்டன
தாய் ஆடு சாக
மிச்சம் இருந்த
குழந்தை குட்டிகளும்
வாயில் பாலின் சுவடுகள்
படிய விற்கப் பட்டன

மேப்பனின்
கூடாரத்திற்குள்ளும்
ஆடுகள் ஒதுங்க முடியவில்லை

வாங்குவோர் கூட்டம்
அலை மோதின
சட்டி எரிக்க
ஒரு துளி
நெருப்பற்றவர்களும்
தம் இளம்
சந்ததியின் உடல்களை தின்றும்
பசி தீராது
புத்தனின்
பெயரை செபித்து கொண்டு
மேய்ப்பனது
ஆட்டுக் குட்டிகளின்
குழந்தை
இறைச்சிகாய் அலைந்தனர்

புத்தரின் பெயரால்
கொத்தி தின்னுகையில்
பற்களின் இடையில்
குழந்தை ஆடுகளின்'
இரத்தம் கசக்காதோ.....
பிஞ்சு இரத்தம்
போதை தருமோ.....

கொல்லப் பட்ட ஆடுகளின்
கணக்கை வல்லரசுகள்
எண்ணட்டும் என்று
மேய்பன் நினைத்தானோ...
மேய்பனின் ஆடுகள் அழிபடுகையில்
அவன் வெளி வருவான் என்று
வல்லரசுகள் நினைத்தனவோ...

கொல்லப் பட்ட ஆட்டுக் குட்டிகாய்
மேய்பன் அழுவானோ...
மேய்பனின் அழுகைக்காய்
ஆடுகள் உயிர் துறக்குமோ....

சாவது(ம்) ஆடுகள்
அதற்காய் அழுவதும் ஆடுகள்
கணக்குகளை எண்ணி
கலங்குவதும் ஆடுகள்
இரத்தம் சிந்துவதும்
ஆடுகள்
ஆடுகளின் கண்ணீரை
எவர் மதிப்பர்..

முழுசாய் கிடைக்கும்
ஒரு பிலா இலையில்
இந்த ஆடுகளின்
அவலம் நீங்குமா...

இது
ஒரு ஆட்டுக் கூட்டத்தின்
வாழ்வை வல்லூறுகள்
கொத்தி தின்னும் காலம்
வல்லூறுகளை
காலம் தானும்
சப்பித் தின்னாதோ...


பாகம் இரண்டு
-------------------------------------------

மேய்ப்பனை காணவில்லை
தேவ தேவனின் வருகையை
காணவில்லை
யுகங்களின் ஆத்ம
புருசனின்
வாளையும் காணவில்லை

சொன்னார்கள்
அவன் ஊழித் தாண்டவம்
ஆடி யுகங்களின்
எல்லாச் சக்திகளையும்
கொண்டு வருவான்
என்று,
எமை மீட்க

என் குட்டிகள்
சாகும் போது
அவனை அடைத்து வைத்தது
யார்

என் குட்டிகள்
பாலருந்துகையில்
முலை வெட்டிய
கசாப்புகாரனை ஏன்
அவன் தண்டிக்கவில்லை


இல்லை
கசாப்பு கடைக்காரனின்
கத்திக்கு பின்னால்
குழந்தை குட்டிகளின்
இரத்தம் சுகிப்பதற்காய்
காத்திருக்கும் நரிகளின்
கூட்டம் அவனையும்
வேட்டையாடுகின்றனவோ..

எனக்கு இவை
பற்றி எதுவும்
தேவையில்லை

என் குட்டிகள் வேண்டும்
என் கிடாய் ஆடு
வேண்டும்
பற்றி பாலருந்திய
என் தாயாட்டின் முலைகள்
வேண்டும்
நான் முன் நடக்க
அசை போட்டு
காலத்திசை நோக்கி
நடக்கும் என் ஆட்டுப்
பட்டி வேண்டும்

இன்று ஆட்டுப் பட்டி
ஆடுகளும் அற்று
அதன் புழுக்கைகளும்
அற்று
வெறிச்சிட்டு கிடக்கின்றது
கொடியில் காயப் போட்ட
கனவு
வெம்பி கிடக்கின்றது

எனக்கு வேண்டாம் இந்த
சுடுகாடு...
மயானத்தின் நடுவில்
ஏற்றிய கொடியை
இறக்குங்கள்
கொடிக் கம்பத்தில்
என் சந்ததியின்
தூக்கு கயிறு
தெரிகின்றது

உங்களிடமும்
கசாப்பு கடைக்காறனிடமும்
மேய்பனிடமும் கூட
கேட்கின்றேன்

என் பட்டி
முழுதும் சிந்தப்பட்ட
குருதியின் பெயரால்
கேட்கின்றேன்

என் குட்டிகளைத் தானும்
விட்டு விடுங்கள்

அவை நாளையாயினும்
மேச்சலுக்கு போகவேண்டும்.......