Friday, October 24, 2014

மெல்ல இறங்கிச் சென்றது - சிறுகதை

அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன்

நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது

நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது
மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின்  வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது
காதுகள் இருந்த இடம் தெரியவில்லை.

நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம்.

கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம்.

அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை.

கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது.

எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம்.

எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள்

அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது.

----------------

அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை.

"என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை.

அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை  ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர்.

அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர்.  எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர்.

-------------------------------------

வெளியில் நிற்கின்றோம்.

பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம்.

பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு  இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது.

அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது.

அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன்.

அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன்.

---------------------------------------------

இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.
இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார்.

அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்.

சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது.

-----------------

எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள்.

எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை.

மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன்.

----------------------------

அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார்.

இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது.

அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார்.

---------------------------------------

அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது.

இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார்,

கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன்.

மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார்,

அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை.

நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை.

----------------------------------------------------------------------

மீண்டும் காலை உதறி விடுகின்றேன்.

திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு.

அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன்  வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன்.

என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா.

செத்தே போயிருந்தான்.

நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது.

உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம்.

அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை.

அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார்.

------------------

நான் இப்ப லண்டன் வந்து விட்டேன்.

அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது.

இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது.

பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது

மறுமுனையில் இருந்தவர்  அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார்.

என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது.

அண்ணாவை புசித்த புழு.

---------------------------------------------

மார்ச் 18, 2014

தகிக்கும் தீயடி நீ - சிறுகதை


அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள்.
அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில்  கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள்
அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள்.
ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல.  மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் அமைந்து இருந்த 609 இலக்க குடியிருப்பு (அபார்ட்மென்ட்) தான் அவளை முதன் முதலில் காண்கின்றேன்.

வீட்டின் முன் அறை முழுதும் சாம்பிராணிப் புகை சூழ்ந்து இருக்கின்றது. அறைக்குள்  இருந்த குத்து விளக்கில் இருந்து வந்த தேங்காய் எண்ணெயின் வாசமும் சாம்பிராணிப் வாசத்துடன் கலந்து வீசுகின்றது. சிவரில் அம்பாளும், குருவாயூரப்பனும் தொங்கிக் கொண்டு இருக்கின்றனர். மூலையில் யேசு நாதர் அமைதியாக காட்சியளிக்கின்றார். வீடே ஒரு வகையான பக்தி மயமாக காட்சியளிக்கின்றது.

எனக்கு முன் நின்று கொண்டு இருந்த மூன்று வேறு பெண்களுடன் அவளும் நின்று கொண்டு இருக்கின்றாள். நாங்கள் இரண்டு பேராகச் போயிருக்கின்றோம். இரண்டு பேர் மூன்றில் இருவரை தெரிந்தெடுக்க வேண்டும். என்னுடன் வந்த என் நண்பன் லதன் ஏற்கனே அவர்களுக்கு மிகவும் அறிமுகமானவன். இன்று தான் என்னை இங்கு கூட்டிக் கொண்டு வருகின்றான். "உன் ரசனைக்கும் விருப்பங்களுக்கும்' இவை தான் சரியானவை என்று சொல்லித்தான் அழைத்து வந்திருக்கின்றான்.

மூன்று பெண்களில் ஓரமாக அவள் நிற்கின்றாள். முதல் இரண்டு பேரையும் நிமிர்ந்து பார்த்த பின் மூன்றாவதாக நின்ற இவளை நிமிர்ந்து பார்க்கின்றேன். மயில் பச்சை நிற மேலாடையில் சந்தன நிற பட்டுத் தாவணியும், அதே நிறத்தில் பாவாடையையும் உடுத்திக் கொண்டு நீண்ட கூந்தலில் மல்லிகைப் பூவையும் சூடிக் கொண்டு நின்று கொண்டு இருக்கின்றாள். மல்லிகையா அல்லது அதே போன்ற ஒரு பூவா என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த அந்த வினாடியே பல யுகங்களுக்கு முன் தொலைத்த ஏதோ ஒன்றை மீண்டும் கண்டுவிட்டதாக மனம் குதிக்கின்ற ஆரம்பிக்கின்றது.

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குறும்புச் சிரிப்பும் பவளம் போல் மேனியும் பால்நிற பற்களும் கருமை நிற கேசமும், அதில் புரளும் மலர்களும் என்று இவளைப் போல் இது வரை பலரை பார்க்கினும் இன்று போல் என்றும் என் மனம் ஒரு வினாடியில் விக்கித்து நின்றது இல்லை. சாந்தமான கண்களுடன் கனிவாகப் பார்க்கின்றாள்.  கண்களின் வழியூடாகவே உயிரை அனுப்புகின்றாள். உடலில் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த என் சுயம்  ஒரு வினாடியில் ஆவியாகி போகின்றது. பாரமற்ற ஒரு சிறு பறவையின் இறகைப்போல நான் ஆகிக்கொண்டு இருக்கின்றேன். ஒரு பெண் இந்தளவுக்கு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்க முடியுமா?..

அங்கிருக்கும் 50 வயது மதிக்கத்தக்க நெற்றியில் குங்குமப் பொட்டும், திருநீரும் பூசி கண்களில் சலனமும் இன்றி இருந்த பெண்ணிடம் "இவளை பிடித்து இருக்கின்றது" என்கின்றேன்.

"ப்ரியா அவருடே போக்கு" என்றுவிட்டு மேலும் இரண்டு மூன்று வசனங்கள் மலையாளத்தில் சொல்லி அந்த வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு அறைகளில் ஒன்றுக்குள் என்னை அவளுடன்  அனுப்புகின்றார் அந்தப் பெண்மணி.

அறைக்குள் மெதுவாக நான் நுழைகின்றேன். இது எனக்கு முதல் தடவை அல்ல. இதுவே இறுதித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ஆனால் மனம் மிகவும் படபடக்கின்றது. கால் பாதங்கள் வியர்க்கின்றன. எனக்குத் தெரிந்த மொழிகளில் உள்ள எல்லா வார்த்தைகளும் ஒரு வினாடியில் மறந்து விட்டதாக உணர்கின்றேன். அங்கிருக்கும் கட்டிலில் நிலை கொள்ளாமல் அமர்கின்றேன். ஒரு கிளாஸ் சிவாஸ் ரீகலாவது அடித்து விட்டு வந்து இருக்கலாமோ என்று ஒரு வினாடி மனம் எண்ணுகின்றது.

கதவினைச் இறுக்கிச் சாத்தியவள், ஒரு சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டு நின்று விட்டு மனசில் இருந்து வரும் புன்னகையுடன் என் அருகே ஒரு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு தெளிவான தமிழில் "ஏன் என்னை அப்படியே விழுங்கிற மாதிரி பார்க்கின்றீர்கள்" என்று கேட்டு விட்டு கல கலவெனச் சிரிக்கின்றாள். மனதில் கோயில் பூசை நேரத்தில் ஒரு சேர அடிக்கும் மணிகளின் ஒருமித்த இசைபோல அவள் சிரிப்பு கேட்கின்றது.

நான் எதுவும் கதைக்காமல் இருப்பதைக் கண்டு, 'உடுப்புகளை கழட்டவா" எனக் கேட்கின்றாள். அவள் கண்களில் இருந்த சாந்தம் கிறக்கமாக மாறத் தொடங்குகின்றது. உள்ளுக்குள் எங்கோ தொலைந்து கொண்டு இருந்த நான் அவள் கேட்டதை சரிவரப் புரிந்து கொள்ள முன்னமே "வேண்டாம் வேண்டாம், I am not still ready" என்கின்றேன்.

விழுங்குவதற்கு எச்சில் கூட எனக்குள் இருக்கவில்லை.

கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவள், "சரி கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருப்பம்" என்கின்றாள்.  கொஞ்சம் கொஞ்சமாக என் நிலைக்கு நான் வரத் தொடங்குகின்றேன். மனம் சாந்தம் கொள்ள ஆரம்பிக்கின்றது. பல காலமாக அமைதியிழந்து கொண்டு வந்து கொண்டிருந்த மனம் அவள் அருகாமையில் மெது மெதுவாக அமைதியுறுகின்றது.

மிக வேகமான, எதுக்கெடுத்தாலும் பணம் என்ற வாழ்க்கை முறை நிரம்பிய டுபாயில் இப்படி நிதானமாக கதைத்து அளவுறாவி ஆறுதலாக அணுகும் முறை இல்லவே இல்லை. செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஏற்ப கட்டணம் அறவிடும் இவர்களின் தொழிலில் இப்படியான ஒருவரையோ அல்லது ஒரு விடுதியையோ பார்ப்பது இயலாத காரியம். ஆனால் இவள் முற்றிலும் மாறுபட்டு இருந்தாள், இவள் மட்டுமல்ல அந்த விடுதியே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. வருகின்றவர்களின் பணத்தின் மீதுதான் கரிசனை என்ற போக்கு அங்கு இல்லாதது ஆச்சரியமாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கின்றது.

எனக்கு அவள் பலவிதங்களில் வேறுபட்டு தெரிகின்றாள். பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போன்ற ஒரு தோற்றம். பல நாட்கள் பழகியது போன்ற ஒரு சிநேகிதம். என் விருப்பங்களுக்கு மட்டுமன்றி தன் விருப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள முனையும் சாதுரியம். என் விருப்புகளை நிறைவேற்ற துடிக்கும் லாவகம், தனக்கு பிடிக்காத சில செயல்பாடுகளைத் தவிர்க்கச் சொல்லி கேட்கும் போது இருக்கும் அதிகாரம். போன்றவற்றால் அவள் எனக்குள் அன்றே முழுவதுமாக நிரம்பிக் கொள்கின்றாள்.

அதன் பின் அடிக்கடி அங்கு செல்லத் தொடங்குகின்றேன்.

ஒவ்வொரு முறையும் செல்ல செல்ல எமக்கிடையிலான நெருக்கமும் அதிகரிக்கின்றது. ஒரு முறை செல்லும் போது அவளிடம் கேட்கின்றேன்

"ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டி வந்தது"

அவர்களைப் பார்த்து அவர்களிடம் செல்பவர்கள் கேட்கும் மிகவும் அபத்தமான ஒரு கேள்வி என்றால் இதுதான். ஆனாலும் கேட்கின்றேன். வழக்கமான பதில் தான் வரும் என்று நினைக்கின்றேன்.

ஆனால், அவள் கூறுகின்றாள்

"எனக்கு இது பிடிச்சு இருக்கு. அதனால் செய்கின்றேன்".

" இங்கு இந்த வேலை செய்ய வேண்டி வரும் என்று தெரிந்தா வந்தாய்"

"தெரியும், வரும் போதே இந்த வேலைதான் என்று தெரியும். ஆனால் வீட்டு வேலைக்கு வருவதாக பொய் சொல்லித்தான் வீசா பெற்றேன்" என்கின்றாள். வழக்கமான புன்னகையும் தெளிவான பார்வையும் இதனைச் சொல்லும் போதும் அவளிடம் தெரிகின்றது.

அவள் எப்பவும் இப்படித்தான் பதில் சொல்கின்றாள். தன்னிடம் வரும் ஆணிடம் ஒரு துளி அனுதாபத்தினைச் சம்பாதித்தாலே போதும் இன்னும் அதிகமாக பணம் பெறலாம் என்ற போக்கும் அவளிடம் இல்லை.
அவள் தன் வேலையை மிகவும் லயித்துச் செய்கின்றாள். அவளால் மனதளவில் ஒன்றுபட முடியாதவர்களை அடுத்த முறை வரும்போது ஏதாவது சொல்லி தவிர்த்துக் கொள்கின்றாள். பிடித்து விட்டால் அவர்களுடன் தன் முழு ஈடுபாட்டினையும் காட்டி வசீகரிக்கின்றாள்.

மேலும் மேலும் அடிக்கடி அங்கு செல்கின்றேன்.

அவளை காணச் செல்லும் சில நாட்களில் வேறு எவரையும் அனுமதிக்காமல் என் வரவைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.  இன்னும் சில நாட்களில் அவள் இன்னொரு வாடிக்கையாளருடன் இருப்பாள். அவருடன் முடித்து விட்டு தலை முழுகி விட்டு வரும் வரைக்கும் நான் அவளுக்காக காத்திருப்பேன்.

அவளைப் பார்க்க எனக்கு சில நேரங்களில் பொறாமை வருவதையும் தவிர்க்க முடியவில்லை. தன் வேலையை மிகவும் ரசித்துச் செய்கின்றாள் என்பதை அவள் செயல்களே உணர்த்தி விடும். அவளுக்கும் மிகவும் பிடித்த ஒருவனாக மாறி விடுகின்றேன். அநேகமாக தன்னைப் பற்றி அனைத்தையும் கூறுகின்றாள். அவள் கேரளாவில் உயர் கல்வி படித்து MA பட்டம் பெற்றவள் என்பதும், அங்கு சிறிது காலம் நல்ல வேலையில் இருந்து இருக்கின்றாள் என்பதையும் அறிகின்றேன். அவளுக்கு தம்பியும் ஒரு அக்காவும் கேரளாவில் இருக்கின்றார்கள். உழைக்கும் பணத்தில் அரைவாசியை  அங்கு அனுப்பி விட்டு மிச்சத்தினை இங்கே செலவழிக்கின்றாள்.

பல தடவைகள் அவளிடம் போய் வெறுமனே கதைத்து விட்டு வந்திருக்கின்றேன். பின் பல தடவைகள் அவளை வெளியே அழைத்துச் சென்று இறுக்கி அணைத்தவாறு சினிமா பார்த்து இருக்கின்றேன். சில தடவைகள் அவளை நிர்வாணமாக்கி விட்டு புத்தர் சிலைக்கு முன் மண்டியிட்டு இருக்கும் ஒரு பிட்சு போல அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்து இருக்கின்றேன்.  சில இரவுகள் என் அபார்ட்மென்ட் இற்கே வந்து என்னுடன் தங்கி அடுத்த நாள் சென்றிருக்கின்றாள். ஒரு வார இறுதியில் வந்து கேரள முறைப்படி மீனும் சோறும் சமைத்து தந்து வார இறுதி முடியும் நாளில் போயிருக்கின்றாள்.

இப்படி ஒரு பெண்ணிடமே தொடர்ந்து போவது தேவையற்ற உணர்ச்சிகளுக்கு (Emotions) இடம் கொடுக்கும் என்று என் நண்பர்கள் சொல்வதையும் நான் கேட்பதாக இல்லை. "கடைசியில் நீ அவளை கலியாணம்தான் கட்டப் போகின்றாய்" என்று நண்பர்கள் சொல்லிப் பார்கின்றார்கள்.

இவ் விடயத்தில் நாம் இருவரும் தெளிவாக இருக்கின்றோம். ஆளை ஆள் எவ்வளவு நெருங்கிக் சென்றாலும் இணைய முடியாது என்று அறிந்து கொண்டுள்ளோம். இருவருக்கும் இடையில் நெருக்கம் இருப்பது போன்றே விரிசல்களும் இருப்பதை ஏற்கின்றோம். எல்லாவற்றையும்  சமூகம் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பத்தினை இழக்க  தயாரில்லை என்பதையும் நான் அறிந்து வைத்து இருக்கின்றேன், அவளும் இதனை அறிந்து வைத்திருக்கின்றாள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் எனக்கு மீண்டும் ஊருக்கு போக வேண்டிய அவசியம் வருகின்றது. ஊரில் என் பெயரில் வாங்கி வைத்து இருந்த ஒரு நிலம் தொடர்பாக ஒரு பிரச்சனை. அவளிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்புகின்றேன்.

பதினைந்து நாட்கள் சென்றிருக்கும், மீண்டும் டுபாய் வருகின்றேன்.

வந்த அடுத்த நாள் அவளிற்கு பல முறை தொலைபேசி எடுக்க முயற்சித்தும் அவளது தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக இவர்கள் அடிக்கடி இலக்கத்தினை மாற்றுவார்கள் என்பதால் அது பற்றி பெரியளவில் கவலைப்படவில்லை. பின் அடுத்த நாள் அவளின் விடுதிக்கு சென்று கதவினைத் தட்டுகின்றேன். ஒரு சீக்கியர் வந்து கதவினைத் திறக்கின்றார்,  அவர் முகத்தினைப் பார்த்தவுடன் புரிந்து போகின்றது, பலர் வந்து கதவைத் தட்டி அவர்களைத் தேடியிருக்கின்றார்கள் என்று. அவர் மொழியில் ஏதோ கத்தி சொல்கின்றார். இது ஒரு Family unit என்று சொல்வது மட்டும் புரிந்தது.

எங்கு போயிருப்பாள்?

பொதுவாக இவர்கள் எப்படித்தான் வெளியிற்கு தம்மை ஒரு குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும் அக்கம் பக்கம் இருப்பவர்கள், அடிக்கடி ஆண்கள் வந்து போகின்றதை வைத்து ஒரு மூன்று நான்கு மாதங்களில் கண்டு பிடித்து கட்டிட உரிமையாளருக்கு ஆக்கினை கொடுத்து எழும்பச் சொல்லிவிடுவார்கள். முதல் ஒருக்காவும் இப்படி நடந்து இரண்டு நாட்களின் பின் அவளே தொலைபேசி எடுத்து தன் புதிய இலக்கத்தினையும் முகவரியையும் தந்து இருந்திருந்தாள்.

இம் முறையும் அப்படித்தான் என்று நினைத்து அவள் தொலைபேசி அழைப்புக்காக காத்து இருக்கின்றேன்,

இரண்டு நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

பத்து நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

ஒரு மாதம் போய்விட்டது; அவள் அழைக்கவில்லை

ஒரு வருடமே ஓடிப் போயிட்டு - அவள் அழைக்கவேயில்லை,

ஒரு வேளை பொலிஸ் அவர்களைப் பிடித்து ஊருக்கு வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்து இருக்குமோ. அல்லது சிறையில் தள்ளி இருக்குமோ ("ஐயோ என் நம்பரை தன் அலைபேசியில் இருந்து அழித்து இருப்பாளோ"), அல்லது ஏதாவது விபத்தில் சிக்கியிருப்பாளோ,

எங்கே போயிருப்பாள்... ஒரு முறை கூட தொலைபேசியில் அழைக்க முடியாதளவுக்கு என்ன நடந்து இருக்கும்? உயிரோடுதான் இருக்கின்றாளா....?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அடுத்த வருடம் நான் எல்லா பொருத்தங்களும் பார்த்து, ஒன்றுக்கு பல தடவைகள் குடும்பம் கோத்திரம் சாதி எல்லாம் விசாரித்து ஒரு சுப முகூர்த்தத்தில் ஊரில் இருக்கும், என்னை விட 9 வயது குறைந்த ஒரு பெண்ணை,  திருமணம் முடிக்கின்றேன்.

ஆனாலும் இடையிடையே அவள் பற்றிய நினைவும் அவள் வரும் கனவுகளும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு முறை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது அவள் பெயரை தவறுதலாக உளறி வசமாக  மாட்டிக் கொண்டு பின் ஒருவாறு சமாளித்து மயிரிழையில் தப்பியிருக்கின்றன். (ஆனாலும் ஒரு டவுட்டுடன் தான் மனைவி அதனை நம்பினார். )

வேலையில் உயர் பதவிகளும் தேடி வருகின்றது. தென் அமெரிக்காவுக்கு சென்று ஐந்து வருடம் வேலை பார்க்க வேண்டி வருகின்றது.  ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றது.

பின் ஒரு நாளில் அலுவலக வேலை காரணமாக தென் அமெரிக்காவில் இருந்து ஓமான் செல்ல வேண்டி வருகின்றது.

ஒமானில் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் தென் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையம் வந்து டிக்கெட், வீசா எல்லாம் காட்டி விட்டு விமானம் புறப்பட நேரம் இருப்பதால் உள்ளே விடுப்பு பார்க்க நடக்கத் தொடங்குகின்றேன்.

என் பின்னால் ஒருவர் ஓடி வந்து என் தோளைத் தொடுகின்றார். பழக்கமான குளிர்ச்சி நிறைந்த கைகளால் தொடப்படுகின்றேன்

மனதில் ஒரு நரம்பு அதிரத் திரும்பிப் பார்க்கின்றேன்.

அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். அவளே தான் நின்று கொண்டு இருக்கின்றாள்.

அதே பொலிவுடனும், அதே சிரிப்புடனும் அதே குதூகலத்துடனும், அதே குறும்புடனும் அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். கொஞ்சம் உடம்பு வைத்திருக்கின்ற மாதிரி இருக்கு. வயிறு இலேசாக ஊதி இருக்கின்ற மாதிரியும் இருக்கு.

"நீயாக இருக்குமோ என்று நினைச்சு ஓடி வந்தன்" என்று மூச்சிரைக்கச் சொல்கின்றாள்.

பின் கையை பிடிச்சுக் கொண்டு தர தரவென்று அங்கிருக்கும் ஒரு சிறு உணவு விடுதிக்கு கூட்டிக் கொண்டு சென்று ஒரு இளைஞனை அறிமுகப்படுத்துகின்றாள்.

"இவர் என் கணவன்" என்று சொல்லி அறிமுகப்படுத்துகின்றாள்.

நான் அவனுக்கு கைலாகு கொடுக்கின்றேன். என் பிள்ளை என்று ஒரு ஆண் குழந்தையைக் காட்டுகின்றாள். அத்துடன் தான் இப்ப திருப்பி மாசமாக இருக்கின்றேன் என்கின்றாள்.

நிறையக் கதைக்கின்றாள், என்னனென்னவோ எல்லாம் சொல்கின்றாள். அவளது கணவனது கடை தான் அது. ஒரு விமான நிலையத்தில் கடை போட்டு வசதியாக இருக்கின்றார்கள் என்று புரிகின்றது.

எனக்கு  நேரமாகின்றது. நான் போகும் விமானத்திற்கான பயணிகள் அழைப்பு அரபு மொழியிலும் ஆங்கிலத்திலுமாக வருகின்றது.

அருகில் இருக்கும் ஒரு சிறு அங்காடிக் கடையில் அவளது ஆண் குழந்தைக்கு நிறைய இனிப்புகளும் ஒரு விளையாடு பொம்மையும் வாங்கி கொடுத்து விட்டு விலகி நடக்கின்றேன்.

இடையில் திரும்பி பார்க்கின்றேன். நான் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கின்றாளா என பார்க்கின்றேன். அவள் தன் உணவு விடுதியில் மும்முரமாக இருக்கின்றாள். இந்த வேலையையும் லயித்துச் செய்கின்றாள் போலும். ஆனாலும் என்னை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை என்பது கொஞ்சம் கவலையை தந்தது என்பது உண்மைதான்.

பின் இரண்டு முறை ஓமான் போக வேண்டி வந்தது.

ஏன் என்று தெரியவில்லை அவளை மீண்டும் காணக் கூடிய சந்தர்ப்பத்தினை தவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சென்று திரும்பி இருந்தேன்.

ஒரு வேளை அவள் இறந்து இருக்கலாம் என்று வசதியாக நினைச்ச என் மனம் அவள் கலியாணம் கட்டி குழந்தை குட்டிகளுடன் என்னைப் போலவே நிம்மதியாக இருப்பதை விரும்பவில்லை போலும்.

---------------------------------
மார்ச், 27 2014

மரணத்தில் தொடங்கும் காலை

எனது காலை மரணம்
பற்றிய செய்திகளில்
விடிகின்றது
நாள் முழுதும்
அவலத்தின் கூக்குரல்

எனது கண்களை
ஆயிரம் கைகளால்
பொத்தி விடுங்கள்
என் காதுகளை
அறுப்பதற்காய்
வாட்களை கொண்டு வாருங்கள்
என்னை நான் ஒளிப்பதற்கு
பாதாளங்களை
திறந்து விடுங்கள்

இறந்த குழந்தையின்
தலையை வருடி விடுகின்றாள் தாய்
சிதைந்த மகனின் உடலை
அள்ளி கொள்கின்றான் தந்தை
நொடியில் அழிந்து போன
தன் அம்மாவின்
கைகளை பற்றிக் கொள்கின்றான்
ஒரு சிறுவன்

வேண்டாம்
இவை எதையும் எனக்கு
இனி சொல்லாதீர்கள்

ஒற்றைச் கையில்
தாயின் கபாலம் ஏந்தி
ஒரு குழந்தை
கனவில் வருகின்றது
என் கோப்பையில்
போடும் உணவில்
பிஞ்சு ஒன்றின்
இரத்தம் கசிகின்றது

வெட்ட வெளியில்
தூரத்தே தெரிகின்ற
ஒரு புள்ளியிலும்
சவ ஊர்வலத்தினை
காணுகின்றேன்
பாடையை கூட பிணங்கள்
தான் காவுகின்றன

படுக்க போன பின்
தலை மாட்டில்
இருந்து மூன்று பிள்ளைகளை
இழந்த அப்பன் ஒருவன்
சத்தமின்றி அழுகின்றான்

மீண்டும் சொல்கின்றேன்
இனி நான்
இவற்றை கேட்கப்
போவது இல்லை

சத்தம் வரும்
எல்லா திசைகளையும்
நான் அடைத்து விட்டேன்
கண் பார்க்கும் எல்லா
உருவங்களிலும்
இருளை சாத்தி விட்டேன்
ஒரு சிறு
செய்தியைத் தானும் நான்
கேட்க போவதில்லை

யுகங்களின் பின்
ஊழி முடிய தேவன்
வருவானாம்
அண்ட சராசங்களின்
வல்லமை கொண்டு
அவன் வருகையில்
மரித்து போன எம்
பிள்ளைகள் அனைத்தும்
எழுந்து கொள்வார்களாம்

அது வரை காத்திருக்கின்றேன்
இறுக்கி வைத்த மூச்சை
யுகங்களின் பின்னே
மீண்டும் விட காத்திருக்கின்றேன்

-நிழலி-

(22-January-2009 10:11 PM)