Thursday, October 23, 2014

கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன

எங்கள் ஊர்களில்
எம் தெய்வங்கள்
கல்லறைகளில் தான்
உயிர்ப்புடன்
உறைந்திருக்கின்றன

எம் தெய்வங்கள்
கல்லாகிப் போனதில்லை
எம் பிரார்த்தனைக்காக
காத்திருந்ததும் இல்லை
அவர்களின் நேர்த்திக் கடன்கள்
எம்மை நோக்கியே இருந்தன

கல்லறைக்கு போகும் முன்
தம் கழுத்தில் தொங்கிய
கனவை
எம் உயிர்களில்
மாட்டி விட்டே போயினர்

எமக்காக பசித்திருந்தனர்
எமக்காக விழித்திருந்தனர்
எமக்காக நிலவற்ற
இருள் வேளைகளிலும்
தன்னந் தனியாக
காடுகள் கடந்தனர்
எதிரியின் இறுதி தோட்டா
முடியும் வரைக்கும்
உண்ணாதிருந்தனர்

நெஞ்சம் தகிக்கும்
கனவுகளை எம்
தெய்வங்கள் கண்டன
ஊரின் எல்லைவரைக்கும்
எதிரியை துரத்துவதாக
சன்னதம் கொண்டனர்
இறுதி துளி உயிர்
கரையும் வரைக்கும்
புதிய தேசம் பற்றியே
ஓயாது உரைத்தனர்

ஊர்களின் கோடியில்
ஒரு குழந்தை தூங்குவதற்காகவும்
எம் தெய்வங்கள்
நாள் முழுதும்
உபவாசம் இருந்தன
உயிரைச் சுருட்டும்
உப்புக் காற்றை
சுமக்கும் கடல் வெளிகளிலும்
ஒற்றை துடுப்புடன்
காவல் கொண்டனர்

2

எம் தெய்வங்கள் உறையும்
கல்லறைகள்
இன்று கதறுவதாய்
ஊர் குருவி அலறுகின்றது
கோயில்களிலும் குடியிருக்கும்
பிசாசுகள் கல்லறை தெய்வங்களையும்
தின்று பசி தீர்ப்பதாக
தலையால் அடித்து அரட்டுகின்றது

கல்லறைகள் சுமந்த
மண் கூட இன்று
தெய்வங்களை நினைத்து
கதறுகின்றதாம்

என்ன சொல்லி
அவர்களை ஆற்றுவோம்
இன்று

என்ன சொல்லி
அவர்களின் ஆன்மாவிடம்
மண்டியிடுவோம்
இன்று

எதைச் சொல்லி
அவர்களை தூங்க வைப்போம்
இன்று

எம்மிடம் ஏதேனும்
வார்த்தைகள் இருக்கா

தன் உறவுகள்
வருவர் என்று
கல்லறை மீது
காத்திருக்க போகும்
எம் தெய்வங்களை
இம்முறை
யார் ஆற்றுவர்

சந்தனப் பேழைகளில்
இனி அழுகை மட்டுமே
வெளி வருமா

3

யுகப் புருசர்களின்
கல்லறையில்
முதலாவது ஆணியை
எதிரி அறைந்தான்
இறுதி ஆணியை
நாம் அறைந்து கொண்டோம்

தெய்வங்களுக்கு முன்னால்
மண்டியிட்டே அவர்களின்
குரல்வளையை நெரித்தவர்களும்
எம்மிடையேதான் உள்ளனர்
என்று எப்படிச் சொல்வோம்
நாம்

இம்முறை நாம்
ஏற்றும் விளக்கை
காறித் துப்பியே
தெய்வங்கள் சபிக்கும்

யுகங்கள் பிளந்து
எழுந்த கொழுந்துகளை
கருக விட்டு
எதிரிக்கு
காணிக்கை வைத்த
எம்மைத் தூற்றும்

ஒன்றாய், நூறாய்
பல்லாயிரமாய்
பறவையாய் பாம்பாய்
பல்மிருகமாய்
பிளந்து கிடக்கும்
எம்மை நினைத்தே
தெய்வங்களும்
செத்துப் போகும்

கால வெளியில்
கண்ணுக் கெட்டா தூரம்
வரைக்கும் எம்
காவல் தெய்வங்கள்
எம்மை விட்டே
நீங்கிப் போகும்

தெய்வங்களுக்கு
பாடை கட்டிய பெருமையில்
மீதம் வாழ்வோம்

****
யுகப் புருசர்களின்
கல்லறையில்
முதலாவது ஆணியை
எதிரி அறைந்து கொண்டான்
இறுதி ஆணியை
நாம் அறைந்து கொண்டோம்

:
நிழலி
(23- கார்த்திகை- 2009)

No comments: