Thursday, October 23, 2014

இமைக்குள் நிற்கும் கேள்விகள்


நீண்ட இரவின் முடிவில்
காத்திருக்கின்றது
நேற்றைய வாழ்வில்
உதிர்ந்து போன ஒரு
பூவின் இதழ்

காட்டு வழிப் பயணத்தின்
இறுதியில் கிடைக்கின்றது
வற்றிப் போன நதியின்
சுவடு

தூரப் பயணம் ஒன்றின்
கடைசித் தரிப்பிடத்தில்
அழிந்து போனது
ஆரம்பித்த இடமும்
இறுதி புள்ளியும்

எங்கு சென்று தேடுவேன்
காணாமல் போன என்
உயிர் தொங்கிய
பெரு விருட்சத்தை

அடர்ந்து பெரிதாக நின்றிருந்த
பெரு விருட்சத்தின்
கிளையில்
தொங்கிய பறவைகள் அனைத்தையும்
பெரும் பூதம் தின்றுகொழுத்த
கதையையும்
அந்த
பூதத்தை என் தோழர்களே
வளர்த்து பறவைகளை தின்னக்
கொடுத்த கதையையும்
எப்படிச் சொல்வேன்
என் பிள்ளைக்கும்
அவன் பேரனுக்கும்

என் வரலாறு முழுதும்
பரவிக் கிடக்கும்
சந்துகள் எல்லாம்
என் தோழர்களின் கல்லறையை
என் மற்ற தோழர்களே தோண்டிய கதையை
எப்படிக் சொல்வேன்
என் மகளுக்கும்
அவள் பூட்டிக்கும்

இறுகிக் கிடக்கின்றது மனம்
ஐயோ
என்று நெஞ்சில் அடித்து
அழவும் முடியாமல்

என்று ஒப்பாரியும் இயலாமல்
சொற்கள் அனைத்தும்
வறண்டு போய்
செத்து கிடக்கின்றது

எங்கு விட்டோம் பிழை
எங்கும் விட்டோமா பிழை ?

நித்திரை வரா
இரவொன்றில்
மேலே வானில் கத்திக் கொண்டு
போகும் Goose இன்
குரலிலும்
தேடுகின்றேன்

இருண்டு கிடக்கும் என் தேசத்தில்
இருந்து ஒரு பதில்
வராதா என

நிழலி : ஏப்ரல் 03 /2011 மாலை

No comments: