Thursday, October 23, 2014

அடிமைக் கால பெரு நதி நீள்கின்றது

யுகங்களுக்கு அப்பால்
பெருக்கெடுத்த காலம்
எம்மை அடிமையாக்கியே
இன்னும் நீண்டு செல்கின்றது

ஈழப் பெருங் கடலையும்
கால நதி சப்பித் துப்பியது

போர்ப் பரணி பாடி
அணிவகுத்த ஆயிரமாயிரம்
தோழர் போன திசை அழித்த
காலம் பெரும் பசி
கொண்டு அலையுது

நெஞ்சில் கனல் கக்க
தோழர்களை காத்த
மக்கள் மீதும்
நெருப்பு துகள்களை
கொட்டி பெரும்பசியை
தீர்த்தலைகின்றது

காலத்தின் திசைகளை
எமக்கு எதிரியாக்கியது
யார்
கொட்டும் குளவிகளின்
நுகத்தடியில்
எம் தலைவிதியை
செருகியது யார்
எதிரியின் கையில்
காலத்தை ஒப்படைத்தது
யார்

எமக்கான காலத்தை
நாமே எழுத முயன்ற
ரட்சகனையும் கால ராட்சதனா
கொன்றழித்தான்

அடிமையாய் கரையும் காலத்தை
உடைத்து சுதந்திரத்தின்
பெரு நெருப்பில்
சாம்பலாக்க முயன்றவனையுமா
கால அரக்கன்
சிதைத்து அழித்தான்

சூனியப் பெரு வெளியில்
கண்ணீர் துளியாய் போன
மந்தைகளின் வாழ்வை
மீட்க வந்த மேய்பனின்
கனவுகளையுமா
கால அசுரன்
சப்பித் துப்பினான்

உயிரற்ற உடலாய்
கிடக்கின்றோம் நாம்
இங்கு
உடலற்ற உயிராய்
அலைகின்றான் மேய்ப்பன்
அங்கு

அவனின் இறுதி
மூச்சிலும் எம்மில்
பற்றாத பெரு நெருப்பை
சபித்து கொண்டே
அலைகின்றான் அங்கு

கால சக்கரம்
நெரித்துப் போட்ட
எம் உணர்வுகளின்
மேல் காறி உமிழ்ந்தவாறே
அலைகின்றான் அங்கு

அவன் நடக்கும் பாதை
எங்கும் காலம் நின்று
பரிகாசம் செய்கின்றது
பற்றாத பெரு நெருப்பு
பற்றி கேலி செய்கின்றது

எம் மீதான
தோற்றுப் போன அவனின்
நம்பிக்கைகள் மீது
அவனின் ஆத்மா
கிடந்தழுகின்றது

இனி
அவன் தன் புல்வெளிகளை
இந்த ஆட்டுக் கூட்டத்திற்கு
தர மாட்டான்

காலத்தை
மாற்றி
எழுத முயன்றவனின்
தோல்வி
அவனின் மந்தைக் கூட்டதாலேயே
எழுதப் பட்டது

யுகங்களுக்கு அப்பால்
பெருக்கெடுத்த காலம்
எம்மை அடிமையாக்கியே
இன்னும் நீண்டு செல்கின்றது..


:நிழலி

(July 22, 2009
காலை 11:50)

No comments: