Friday, October 24, 2014

மெல்ல இறங்கிச் சென்றது - சிறுகதை

அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன்

நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது

நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது
மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின்  வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது
காதுகள் இருந்த இடம் தெரியவில்லை.

நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம்.

கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம்.

அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை.

கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது.

எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம்.

எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள்

அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது.

----------------

அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை.

"என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை.

அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை  ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர்.

அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர்.  எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர்.

-------------------------------------

வெளியில் நிற்கின்றோம்.

பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம்.

பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு  இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது.

அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது.

அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன்.

அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன்.

---------------------------------------------

இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.
இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார்.

அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்.

சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது.

-----------------

எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள்.

எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை.

மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன்.

----------------------------

அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார்.

இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது.

அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார்.

---------------------------------------

அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது.

இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார்,

கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன்.

மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார்,

அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை.

நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை.

----------------------------------------------------------------------

மீண்டும் காலை உதறி விடுகின்றேன்.

திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு.

அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன்  வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன்.

என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா.

செத்தே போயிருந்தான்.

நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது.

உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம்.

அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை.

அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார்.

------------------

நான் இப்ப லண்டன் வந்து விட்டேன்.

அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது.

இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது.

பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது

மறுமுனையில் இருந்தவர்  அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார்.

என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது.

அண்ணாவை புசித்த புழு.

---------------------------------------------

மார்ச் 18, 2014

No comments: