Thursday, October 23, 2014

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்

இரண்டு ஈர உதடுகள்
என்னை முத்தமிட்டு
நீங்கின

ஒன்றில்
பொத்தி வைத்த காதலும்
வெளிப்படுத்தி வெளிப்படுத்தி
அடங்கா(த)
காமமும் நிறைந்து இருந்தன

இன்னொன்றில்
வெள்ளை நிறத்தில்
அன்பு இருந்தது
"இவன் என் அப்பா"
என கட்டிப் பிடித்து
இறுக்கி சிரிக்கும்
சின்னச்
சிறுக்கியின்
பாசம் இருந்தது

இரண்டு முத்தங்களிலும்
என் வாழ்வு
தொங்கி நின்றது

********

அவர்களை அனுப்பிவிட்டு
வீடு செல்கின்றேன்
வாசல் திறக்கும் போது
சூனியம் அப்பிக் கொள்கின்றது

கட்டிலும், தொட்டிலும்
சோபாவும்,
சட்டியும் முட்டியும்,
முட்டை பொரித்த பின்
எஞ்சிப் போன தாச்சியும்
சிந்தப் பட்ட ஒரு சொட்டு
எண்ணெயும்,
என்னவள் கழட்டிப் போட்ட
பனிச் சப்பாத்தும்
என் மகள் அணிந்து கழட்டிய
'ஸ்கேர்ட்டும்"..
எல்லாமும் அப்படியே
இருக்க
எதுவும் அற்ற சூனியம்
அப்பிக் கொள்கின்றது

எல்லாம் இருந்தும்
எதுவும் அற்ற பெரு வெளியில்
மனம் அலைந்தது

என்னவளது
ஒரு விரலின்
தொடுகைக்காக
ஓராயிரம் யுகங்கள்
தொடுதல் அற்று காத்திருக்கும்
ஒரு
கள்ளிச் செடியாக
மாறலாம் என்று இருந்தது

என் மகளின்
மழலைச் சொல்லுக்காக
மெளனமாகவே இருக்கும்
எட்டாவது ஸ்(சு)வரம் ஆக
மாறலாம் என்று இருந்தது


***************************************

நடு இரவில் விழித்து
Flight Status பார்த்து
மீண்டும் படுக்கின்றேன்

பல யுகங்களாக
நித்திரை கொள்ளாத
கண்களின் சுமை
மனதில் ஏறுகின்றது
கால பைரவன் எப்படித்தான்
கண் தூங்காது
புளிய மரத்தின் உச்சிக் கொம்பில்
தவம் இருக்கின்றானோ

**
தூரத்தே
கொழும்பு ரயில் ஒன்றில்
குருட்டு சிங்கள பிச்சைக் காரன்
பாடியதை
மனம் மீண்டும் கேட்டது
அருகில்

"ஓராயிரம் ஆண்டு
வாழ்ந்த வாழ்வின்
அர்த்தத்தை ஒரு நாள் பிரிவு
தரும் என"

:நிழலி

(ஊருக்கு மனிசி மற்றும் மகளை அனுப்பிய பின் வீட்டை வந்த பின் தோன்றிய ஒரு உணர்ச்சி இது)
சனவரி 04, 2012)

No comments: