Thursday, October 23, 2014

சொல் அப்பா சொல்

வெள்ளை பனி உருகி
வீட்டின் முன் வழிகின்றது
வளைந்து செல்லும் வீதியெங்கும்
பனியின் சிதறல்கள்
காற்றின் திசையெங்கும்
குளிரின் வாசம்

பனி பார்க்க விரும்பும்
மகனை கூட்டிச்
சென்று காட்டுகிறேன்
குவியலாக இருக்கும்
பனிக்குள் குளித்தெழும்புகிறான்
சறுக்கி வீழ்ந்து சிரித்து
எழும்புகிறான்
வெண் நுரை அள்ளி
வீசி விளையாடுகிறான்

இப்படித் தானே அப்பா நீயும்

ஊர் முழுதும் மழை
நிரம்புகையில்
சைக்கிளில் என்னை வைத்து
வெள்ளம் காட்டுவதும்
மழையில் நனைவதின் சுகமும்
வெள்ளத்தை கூறு கிழித்து
சைக்கிள் ஓட்டுவதன்
பரவசமும் அப்பா
நீ காட்டியது தானே
எனக்கும்

பின்பு
பனை வெளிகளினூடு போகையிலும்
மலைக் குன்றுகளினூடு நடக்கையிலும்
நீர் வெளிகள் தோறும் கூட்டிச் செல்கையிலும்
உன் விரல்களுடன் என்
விரல்களை இறுக
பிணைந்து கொள்வாய்
யமனால் கூட
பிரிக்க முடியாது நம்
விரல்களை

ஆயினும் அப்பா
என்று உன் விரல்களை
நான் பிரித்தெடுத்தேன்?

என்னையும் உன்னைபோல் ஆணாக
புரியும் போதா
உன் விரல்களை
நான் பிரித்தேன்?
அல்லது
அப்பாக்களுக்கும்
மகன்களுக்குமான
பெரும் இடை வெளியிலா
உன்னை தொலைத்தேன்

உன்னில் இருந்து என்னை
பிரிக்கையில்
உன் விரல்களின் நோவை
நான் அறியவில்லை
உன் மனதின் ஓரத்தில்
இருந்த கண்ணீரின் துளிகளை தானும்
நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா
என்பதில் கூட எனக்கு
அக்கறை இருக்கவில்லை

ஒவ்வொரு முறையும்
நான் வீழ்கையில்
தூக்கிவிட்ட உன்
தோள்களை கூட நான்
மறந்து இருந்தேன்
என் காதல் தோற்று
நான் உடைந்திருக்கையில்
மெளனமாக என்னை
அடை காத்ததை கூட
விரும்பாது இருந்தேன்

இன்று
என் மகனை கொஞ்சுகையிலும்
அவனின் மொழியை காண்கையிலும்
உன் ஞாபகம் ஏன் வருகின்றது..
அவனது சின்ன
தவறுகளை திருத்துகையில்
எப்படி உன் மொழி
என் நாவில் ஒட்டியது
சில வேளைகளில்
என் குரலில் கூட
உன் சொற்களின்
வாசம் எப்படி
வருகின்றது

உன்னை கொடும் நோயில்
பார்த்த நிமிடங்களில்
வராத அழுகையும்
உனக்கு சிதை மூட்டுகையில்
எழாத பெரும் துயரமும்
எப்படி
இப்போது மட்டும் எனக்கு
வருகின்றது

சொல் அப்பா சொல்

யுகம் யுகமாய் தொடரும்
அப்பன் மகன் உறவின்
எல்லாக் கண்ணிகளும்
இப்படித் தானா இருக்கும்

நீ கூட இப்படியா
உன் அப்பாவையும்
எல்லாம் முடிந்த பின்
உணர்ந்து கொண்டாய்
என்று சொல்

எனது மகனாவது
இதன் நுட்பத்தை புரிந்து
கொள்ளட்டும்
எனது இன்றைய
தவிப்பு அவனுக்கும்
வராது போகட்டும்

சொல் அப்பா சொல்

-நிழலி--

December 31, 2008

No comments: