Thursday, October 23, 2014

எனது மரணம்: முதலாவது அறிக்கை: நிழலி

இப்போதெல்லாம்
மரணம் பற்றிய
எண்ணங்கள் அடிக்கடி
வருகின்றன
பல தடவை மரணத்தின்
கற்பூர வாசனை
(இடையில் சாணி வாசனையும் வரும்)
என்னருகே வந்தும் உள்ளது

மரணம் நேற்று
காபி கடையில் (Starbucks)
நான் ஒடு cup காபிக்காக
காத்திருக்கையில்
என் பக்கம் வந்து
அமர்ந்திருந்தது
எதுவும் பேசாமல்
அதன்
கண்ணின் ஓரம் நீர்
துளி இருந்தது

திடீரென ஒரு Right turn
இல் என் car திருப்புகையில்
மரணம் என் பக்கத்து
seat இல்
அமர்ந்திருந்தது
என்னை கேள்வி கேட்குமாய்
அதன் முகம் இருந்தது

பின்
அந்த இரவில்
சரியாக நடுச் சாமத்தில்
மனைவியை தேடி
கைகள் போகையில்
அருகே
மரணம் படுத்திருந்தது
இம்முறையும்
ஒற்றை வார்த்தையும்
பேசவில்லை அது

மரணத்தின் முகத்தை
முன்பும் பார்த்திருக்கின்றேன்
உயிர் தப்ப
எதிரியின் காலை முத்தமிடுகையில்
மரணம் காறித் துப்பிவிட்டு
போயிருக்கு

எதிரியின் நகரத்தில்
என்னை விற்கையிலும்
அது பரிகாசம் செய்திருக்கு
நான் இரட்டை நாக்கில்
தொங்குகின்றேனாம் என்று
(ஒன்று தமிழ் மற்றது வாழ்வு)

ஆனால் இப்பவெல்லாம்
அது ஒன்றும் சொல்வதுமில்லை
செய்வதுமில்லை

ஒரு அகதி போன்று
என்னருகே வரும்
மீண்டும் விலகிப் போய்
மெளனமாகப் பார்க்கும்
அதன் விழிகளில்
என் வம்சம் முழுதும் எரித்த
வேட்கை மிச்சமிருக்கும்

எப்போது
என்னை ஆக்கிரமிப்பாய்
எனக் கேட்டவுடன்
மர்மமாய் அழுது
விலகிச் செல்லும்

மரணம் கூட தீண்டா
உலகிலா நான் இருக்கின்றேன்
***********

எனக்கு மரணத்தின்
வாசனை இப்பவெல்லாம்
பிடித்துப் போகின்றது

அப்பா சாகும் நாளின்
முன்னிரவில்
அந்த வாசனையை
அவரில் கண்டேன்
அவரின் அறை முழுதும்
அது நிரம்பியிருந்தது

பின் என் மருமகனின்
சாவுச் செய்தி கேட்ட
நாளின் முதல் நாள்
அந்த வாசனை
என் கனவுகளிலும்
நிரம்பி இருப்பதை
நினைவு கொள்கின்றேன்

மரணம்
எப்போதும் அறிவித்து வரும்
விருந்தாளியாகவே
எனக்கு வந்திருக்கு
ஒன்றில் என் அப்பனை
இல்லையேல் என் உறவை
காவு வாங்குகையிலலும்
அது பாவம்
அறிவித்து விட்டே வந்தது

ஒரு மெல்லிய
காற்றாய் மரணத்தின்
வாசனை பரவும்
பின் என்னுயிரை
உருக்கும்

******

இப்போது அது
என்னிடம் அடிக்கடி வருகின்றது

எல்லாரும் நித்திரை கொண்டபின்
என் அறை முழுதும்
வாசம் கொள்கின்றது

சில நேரம் அது அழும்
சில நேரம் தானே
கடவுள் என அரற்றும்
தான் தழுவா உயிர் எது
என இறுமாப்புக் கொள்ளும்
தான் வெல்லாத இடம் எங்கே
எனக் கேட்கும்
சில நேரம்
பச்சிளம் பாலகனை கொன்ற
வெறியில்
மூச்சிறைக்கும்

அப்படிக் கொன்ற பின்
அது பிதற்றும் போது
ஒன்றும் நான் சொல்வதில்லை
என் பிள்ளையை மட்டும்
ஒளித்து வைப்பேன்

இன்றிரவும் என்னால்
மரணத்தின் வாசனையை
நுகர முடிகின்றது

மெல்ல மெல்ல
என்னை ஆரத் தழுவத்
தொடங்கிய வாசனை
அது

மெல்லிய
போதை ஏறும்
கற்பூரம் மணமும்
சாணி மணமும் கொண்ட
அந்த வாசனையை
உணர்திருக்கின்றீர்களா?


Apr 17, 2010

No comments: