Thursday, October 23, 2014

நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர்



மீண்டும் உருப்பெறாத
கனவுகள் இரவின் நடு நிசியையும்
தாண்டி வருகின்றன
கைகள் முளைத்த பல கனவுகள்
கழுத்தையும், குரல்வளையும்
நெரித்து கொல்கின்றன

என் கனவுகளுக்கு
மொழிகள் இருப்பதில்லை
நிறங்கள் இருப்பதில்லை
சத்தம் இருப்பதில்லை
மெளனம் நிறைந்த கனவில்
நேற்றைய மனிதர்கள்
வந்துபோயினர்

அவர்களின் கேள்விகள்
அவர்களின் ஏமாற்றங்கள்
அவர்களின் துயரங்கள்
அவர்கள் சொல்லும் உண்மைகள்
எதற்கும் ஒலியிருப்பதில்லை
ஆயினும் உயிர் துளைத்து
ஓராயிரம் யுகங்களைக் கடக்கும்
வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர்

வலிய கனவொன்று இரவு
கடக்கும் ஒவ்வொரு நாளிலும்
நான் அச்சமுறுகின்றேன்
கண்கள் மேல் படர்ந்த
கனவின் சுமையில்
பகலின் பொழுதுகளையும்
பார்க்க அஞ்சுகின்றேன்

இந்த மனிதர்கள் எங்கிருந்து
வருகின்றனர்
எப்படி மீண்டும் மீண்டும்
என்னுள் இறங்கி
இரவு முழுதும் எனக்குள்
நடந்து செல்கின்றனர்
ஏன் ஒரே சீருடையை எப்பவும்
அணிந்து கொள்கின்றனர்
நேற்றோ முந்தநாளோ
அல்லது என்றுமோ
இவர்களை கண்டதாகவும்
ஞாபகம் இல்லை

ஒவ்வொரு இரவிலும்
ஏதோ ஒரு கணத்தில்
கனவுகள் உடைபடுகின்றபோது
வந்தவர்களும் உறைந்து போகின்றனர்
மறுநாளில் மீண்டும் உடைந்த
கனவு மீள் உருவம் கொள்கையில்
உறைந்தவர்கள் மீண்டும்
விட்ட இடத்திலிருந்து
அசைய தொடங்குகின்றனர்

நேற்றும் அந்தக் கனவு வந்தது
நேற்றைய மனிதர்கள் வந்தனர்
இடையிலொரு கணத்தில்
உடைந்து போனது கனவு..

உடைந்த கனவு விரல்
வழியே கசிந்து கவிதையாகியபின்
உறைந்து போனவர்கள்
மீண்டும் என் முன்
எழத் தொடங்கினர்…..

:நிழலி
(நவம்பர் 03/2009)

No comments: