Thursday, October 23, 2014

என் முகத்தை எங்காவது கண்டீரா?

என் முகத்தை எங்காவது கண்டீரா?

என் விம்பத்தை கண்ணாடியில்
பார்க்கின்றேன்

உடைந்து போன ஒரு கண்ணாடியில்
தெரியும்
சிதறிய முகமாய் எனக்கு
என் முகம் தெரிந்தது
சிதறல்களில் தெரிந்த
என் முகம்கள்
ஒவ்வொரு முகமூடி அணிந்து
இருந்தது

இப்படி முன்னம்
என் முகம் இருக்கவில்லை

அதற்கே அதற்கு என
இரு கண்கள் இருந்தன
இரு செவிகள்
இருந்தன
ஒரே ஒரு நாக்கும்
ஒரு சோடி உதடுகள்
மட்டுமே இருந்தன
எப்ப பார்த்தாலும்
இது என் முகம்
என்று உரிமை கோரியிருந்தேன்

ஆனால்
கண்ணாடியில் இப்ப தெரியும்
என் முகம் எனதில்லை

என் முகத்தை என்னிடம்
இருந்து திருடியது யார்?

என் கண்களை அகற்றி
தம் கண்களை
செருகியது எவர்?

எனக்கே எனக்காக
இருந்த குரலையும்
திருடி
அதில் தம் குரலையும்
பதிந்தவர் யார்?

என் முகம்
என் குரல்
என் பார்வை
திருடப்பட்டனவா?
அல்லது
என்னாலேயே
தொலைக்கப்பட்டனவா?

எனக்கான ஒரு சொட்டு
வசனம் கூட இன்று
எனக்கில்லை
எனக்கான வார்த்தைகளைக் கூட
திருடி கொண்டது யார்?

உடைந்து போன
அல்லது திருட்டுப் போன
கோப்பைத் தட்டில்
வாழ்க்கையை உண்ணுகின்றேன்

எனது வாழ்க்கையை
நான் உண்ட
சாப்பாட்டுக் கோப்பை
காணாமல் போயிற்றா
அல்லது
திருட்டுப் போயிற்றா
என்று கூட உணராத
ஒரு காலைப் பொழுதில் தான்
என்
முகமும் சிதைக்கப்பட்டது
என்பேன்
சிதைத்தவர்களுக்காக பல முறை
காவடி எடுத்து இருந்தேன்

என் முகத்தை
நீங்கள் போகும்
ஒரு தெருவிலோ
அல்லது
ஒரு சந்திலோ
அல்லது
ஒரு
மலசல கூடத்திலோ
கண்டெடுத்தாலோ....

அந்த முகத்திடம் சொல்லுங்கள்
அதன் உரிமையாளன்
பல ஆண்டுகள் முன்னமே
செத்துவிட்டான் என
---

நிழலி
சனவரி 08, 2012 

No comments: