Thursday, October 23, 2014

உடைந்த மூங்கிலானேன்

ஒரு உடைந்த மூங்கில் பற்றி
யாரும் கவலைப் பட வேண்டாம்
உடைந்த மூங்கிலால்
புல்லாங்குழல்
ஆக முடியவில்லை

அது முகாரி பாடியதா
இல்லை
புரட்சி பாடியதா
இல்லை
தன்னையே உடைத்து
அழுகுரலை
இசைத்ததா

யாரும் கவலைப்
படவேண்டாம்

மூங்கிலின் மேலிருந்த
குருவி
தன் காதலனின்
வீரச் சாவு கேட்டு
அழுது குளறியது

மூங்கிலை
கடந்த காற்று
தன் தலைவனின்
வீர மரணம் பற்றி
ஓங்கி அறைந்து
ஒப்பாரி வைத்தது

மூங்கில் அழவில்லை
மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை
தன்னை கடக்கும்
காற்றனைத்தும் அழுகை அல்ல
இசை என்றது

அதன்
உடைவு ஆரம்பித்து
இருந்ததை
அது அறியவில்லை
இன்னும்
புல்லாங்குழல் ஆகலாம்
எனும் கனவில்
அது மிதந்தது

மூங்கிலால்
தன் உடைவை
நம்ப முடியவில்லை

தன் காதலியுடன்
சல்லாபித்தது
தன் ஆசை நாயகியுடன்
காமுற்றது
இன்னும்
போதை ஏறிய கண்களுடன்
காமம் தேடி அலைந்தது
பெண் வாசம் தேடி
அண்டம் வரை சென்றது

மூங்கில் உடைந்து விட்டது
என அயலவர்
சொன்னர்
இது அதன் அந்திம காலம்
என உறவினர்
சொன்னர்
அதன் இறுதி நாள்
இதுவென
எல்லோரும்
உரைத்தனர்
மூங்கிலின் வீட்டு
வாசலில்
பாடை கட்டப் பட்டுகொண்டிருக்கு


தெருவில் பறை அடிப்பவன்
சென்றான்
ஒற்றை மாடு
அசை போட்டு
சென்றது
யாருமற்ற வெளியில்
தலைவன் நடந்து
போனான்
அவனின் பின்னால்
அவனது நிழல் கூட
இல்லை

மூங்கில்
தன் உடைவு பற்றி
இன்னும் அறியவில்லை
அதன்
ஒவ்வொரு கணுவிலும்
கண்ணீர் இருக்கு
எனவும் அறியவில்லை

அது பாட்டுக்கு
கவிதை எழுதிச் சென்றது

இரவின் நடு நிசியில்
மாண்ட தோழர் பற்றி
கனவு கண்டது
தான் அவர்களுக்காய்
புல்லாங்குழல் ஆனது
பற்றியும் கனவு கொண்டது

உடைந்து
கண்ணீர் ஒழுகும்
மூங்கில் பற்றி யாரும்
அழ வேண்டாம்

அது புல்லாங்குழல்
கனவில் இன்றும்
கவிதை எழுதுகின்றது
*************

நிழலி
05 aug 2009 10`28 PM

No comments: