Thursday, October 23, 2014

எமக்கொரு நாடு கேடா


வெறுப்பு உமிழும் காலம்
மீது வாழ்வு சூழ் கொள்கின்றது

ஒரு கண்ணை மறு கண்
பிடுங்குது
தான் பார்க்கா காட்சிதனை
நீ பார்த்தல் ஆகாது
என ஆவேசம் கொள்ளுது
எதிரியின் தணல் எடுத்து
மறுகண்ணை
சுடுது

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

ஒரே காட்சியை
ஒவ்வொருவரும்
வர்ணம் பூசி பார்த்தோம்
என் வர்ணம்
பார்க்காத கண்னை
வீதியின் முடிவில்
குச்சொழுங்கையில்
குடி வைத்தோம்

எம் கண்ணை நாமே
குருடாக்குவோம்
எம் கைகளில்
நாமே விலங்கிடுவோம்
வரலாற்றின் நீண்ட பக்கம்
எங்கும் எம்
தோல்வியை நாமே
எழுதிக் கொள்வோம்

எம் முதுகெலும்பில்
எதிரியின் மாட்டுச் சாணத்தை
அப்பியது நாம்
எம் குடிசைகளில்
கண் வைத்து
சகோதரிகளின்
அம்மணத்தை விற்றதும்
நாம்
ஈற்றில் எம் ஊரை
விற்றுக் கொடுத்ததும்
நாம்

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

எமக்கொரு நாடு கேடா

உலகத்தின் எச்சில்
எம் முகத்தில்..
எதிரியின் மலம்
எம் உணவில்..
இருட்டில் உலவும்
காட்டேரியுடனும் உறவு கொள்வோம்
எம் இனத்தை சாகடிக்க

என் எதிரியின்
மூத்திரம் எனக்கு
தாகம் தீர்க்கும்
அவன் என் பங்கு
கேட்கும் தம்பியை
கொன்றால்...

சிறையுடைக்க வந்தவர்களையே
சிறை கட்ட ஆணையிட்டோம்
எம் சிறகாய் தம்மை ஆக்கியவர்களை
ஈட்டி முனையில் கொளுவி
எதிரிக்கு காட்டிக் கொடுத்தோம்

எமக்கொரு நாடு கேடா

என் இனம் பற்றி
கனவு வரும் ஒவ்வொரு
வேளயிலும்
என் படுக்கை முழுதும்
பூரான்கள் ஊர்ந்தன

என் ஊர் பற்றிய
நினைவுகளில்
மின்சார கம்புகளில்
பிணங்கள் தொங்கின
(மண்டை பிளந்து இருந்தது)

என் அண்ணனும்
அவனின் காதலியும்
ஒருவரை ஒருவர்
சுட்டுக் கொன்றனர்
சாக முன் இறுதி
கணத்தில்
"நீ துரோகி என " கூக்குரல் இட்டனர்

முன்னொரு நாள்
இருவரும் யாருமற்ற
ஓரிரவில்
விடுதலைக்கு போயிருந்தனர்

இது எம் சாபம்
யுகங்கள் தோறும்
நாம் இப்படி தான்
இருந்தோம்

எதிரியின் முலையறுபட்ட
குவேனி கிழவியா
எமக்கு
இப்படி ஒரு செய்வினை
செய்தது

ஒவ்வொரு தடவையும்
எம் கண்ணை நாம்
குத்தும் போது
துட்டகை முனி
சிரித்துக் கொண்டான்
தன் கணக்கு சரியென

எமக்கொரு நாடு கேடா

வரலாறு தோறும்
எம் தோல்வியை
ஊரும் சரக்கு அட்டையென
எழுதிச் செல்வோம்

:
நிழலி
Sep 06, 2009

No comments: