Thursday, October 23, 2014

கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்:


கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள்
------------------------------------------------------------------
அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்



இறக்கும் போது அக் குழந்தைகள்
எதை கனவு கொண்டு இருந்திருக்கும்..
வெடிகுண்டு சத்தம் கேட்காத
ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு
தாயின் மடியில் தலை வைத்தும்
அப்பாவின் மடியில் கால் நீட்டியும்
படுப்பதாய் கனவு கொண்டிருக்கும்

ஒரு சின்ன பொம்மையுடன்
கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும்
தங்கள் வளர்ப்பு நாயின்
குட்டிகள் மழையில் நனைந்துடுமோ
என்று கவலைப்பட்டுக் கொண்டு
இருந்ந்திருக்கும்

தெருவில் தொலை தூரத்தில்
வரும் ஐஸ் கிறீம் காரனின்
பாம் பாம் எனும் ஹோர்னைக் கேட்டு
நாவூற காத்திருந்து கொண்டு இருந்திருக்கும்

ஆனால் எல்லா போர் நகரங்களிலும்
அழித்தொழிக்கப்படும் குழந்தைகளின்
கனவுகள் போல
அவர்களின் கனவுகளும்
அழிந்து போயிருக்கும்

எங்கள் ஊர்களிலும் ஊர்ந்த
டாங்கிகளின் கீழும்
வீழ்ந்த ஷெல்களின் கீழும்
விமானக் குண்டுகளின் ஆழத்திலும்
ஆயிரமாயிரம்
எம் குழந்தைகளின்
கனவுகள் புதைக்கப்பட்டன

கொல்லப்படும் தறுவாயில்
ஒரு குழந்தையின்
ஓலம் எப்படிப்ப்ட்டது
தெரியுமா
அதன் கண்கள் எப்படி
சொருகிப் போகும் என
அறிவீர்களா
அது சாகும் போது
அருகிருக்கும் தாயின்
கதறல் எத்தகையது
எனக் கேட்டிருக்கின்றீர்களா


போரில் கொல்லப்படும் எல்லாக்
குழந்தைகளையும் போல
அவர்கள்
கொல்லப்படுகின்றனர்
கொல்லப்பட்ட எல்லாக் குழந்தைகளின்
கனவுகள் போலவே அவர்கள்
கனவும் சிதைக்கப்படுகின்றன
கொல்லப்படும் உயிர்களைப் போன்றே
கண்களின் ஓரத்தில் துளி கண்னீரை
சிந்தி சாகின்றனர்

அவர்கள்
நித்திரை கொண்டு கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும்
ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர்
சிதைந்த குழந்தைகளின் உடல்கள்
மீது கொடிகளை பறக்க விடுகின்றனர்.

நிழலி
31/July/2014

No comments: