Thursday, October 23, 2014

அப்பாவின் ஈர நினைவுகள்....

வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..


ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

மார்ச், 25 2013

------------

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

No comments: