Tuesday, October 21, 2008

நினைவழியா பயணம்

நீண்ட நெடிய பயணங்களின்
பின்பு அங்கே தரித்து
நின்றோம்

செம்மண்ணின் வாசனையும்
வேலி கதியால்களில் பூத்திருந்த
முள் முருக்குகளின் பூக்களும்
தொலைந்து போயிருந்த நினைவுகளில்
உயிர் தடவிற்று

கரிய நிற மாடு பூட்டி
வண்டில் ஒன்று கடந்து போனது

இருளும் நினைவும்
நிலவின்
ஒளியுடன் கலந்த இருந்த
பொழுதில் தான் நாம் அந்த வீதியில்
அமர்ந்து கொண்டோம்

நேற்றும், முந்த நாளும்
அதற்கும் முன்பாகவும்
என் தோழர்கள்
உயிர் சரிந்து வீழ்ந்த
வீதி அது

ஒவ்வொரு அங்குல
நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு
போராடி களம் வென்ற
என் தோழர்களை
தாங்கி நின்ற
வீதி அது

என் பாட்டனின், அவனதும்
பாட்டனின் காலடிகளின்
தடம் காக்க, அவனின்
பரம்பரை போராடி காத்த
வீதி அது

கல்லாய் அமர்ந்து இருந்தோம்
அதில்
வீழும் தோழருக்கு
தோள் கொடுக்க
வழியின்றி இருந்துவிட்டு
வெற்றியின் பின் விருந்து
உண்ண அமர்ந்து இருந்தோம்

மரணித்த தோழர்களின்
குருதி வழிந்த கதைகளை
கேட்பதற்கு அமர்ந்து
இருந்தோம்

அவர்களின்
மரணம் தந்த
வெற்றியின் விழுதுகளை
சுவைபதற்காக
அமர்ந்து இருந்தோம்

கரிய வானில்
கரிச்சான் குருவி
ஒன்று ஏளனமாய் சிரித்து
விட்டு பறந்தது,
தான் கூட
தோழர்கள் வலி மறக்க
இசை மீட்டகதை
சொல்லி சிரித்தது

எழுந்து மீண்டும் பயணம்
தொடரும் போது
நாங்கள்
ஒரு சிறு
குருவியை கூட
நிமிர்ந்து பார்க்கவில்லை
-----------------------------------

முதல் பதிவிற்கான இன்னொரு பதிவு

மீண்டும் மீண்டும் நேற்று எழுதிய முதல் பதிவை வாசித்து பார்க்கிறேன்.

நாளந்த நிகழ்வுகளை, நான் பார்கின்ற, கேட்கின்ற , ரசிக்கின்ற விடயங்களை எழுதுவதற்கும். வாசிக்கிற புத்தகங்களை பற்றி எழுத போவதற்கும், கிறுக்குத்தனமான கவிதைகளுக்கும் என் முதல் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றவில்லை. அதனை ஏன் எழுதினேன் என்றும் புரியவில்லை. நீக்கி விடுவமோ என்று கூடயோசிக்கிறேன்.

என முதல் பதிவுக்கும் இனி எழுத போவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது திட்டமிட்ட ஒரு நிகழ்வாக இருக்கப்போவதும் இல்லை

எதனையும் திட்டமிடக் கூடியதாகவா வாழ்கை இருக்கின்றது ??

--நிழலி-

Monday, October 20, 2008

இருப்பும், மீண்டும் எழுதுவதும்:முதல் பதிவு

இருப்பை தக்க வைப்பது என்பது இருத்தலை விட கடினமாக மாறி வரும் ஒரு சூழலில் என்னை எப்படியாவது நிலைப்படுத்தும் உறுதியில் இந்த பக்கத்தை ஆரம்பிக்கிறேன். நாளை மீண்டும் எழுதுவேனா அல்லது இந்த ஒரு குறிப்புடனேயே நிறுத்தி விடுவேனோ தெரியாது.

எதுவுமே நிச்சயிற்க இயலாத நிலையில்தான் எல்லாவற்றையும் எழுத விளைகின்றது மனம்.


என் வாழ்நாள் முழுதும் சிங்கள பேரினவாத அரசுகளாலும், இந்திய வல்லாதிக்க அரசாலும் எம் மீது திணிக்கப்பட்ட போர் ஒரு நிழலாகவே தொடருகின்றது. என் சிறுபிள்ளை காலம் முதல் இந்த நிமிடம் வரை அதன் போக்கில் அள்ளுபட்டும், மூச்சு திணறியும், சுயம் அழிந்தும், அதனுடன் சமரசம் கொள்ள முடியாமல் முட்டி மோதியும் வாழ்வு நகருகின்றது. எண்ணற்ற மரணங்களும், கொலையுண்டு போன மனிதர்களின் நினைவுகளும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஒரு கரிய புகையை போல சூழ்ந்து கொண்டு நிற்கின்றன.

விடுதலை போராட்டமும், அதன் வீச்சும், அது தந்த சுதந்திரம் பற்றிய உயரிய எண்ணங்களும், அப் போராட்டம் இழைத்த, இழைத்துகொண்டு இருக்கின்ற தவறுகளும், அதன் மீதானதும், எதிரானதுமான என்னுடைய விமர்சனங்களும் எனக்குள் என் இருப்புக்கான நியாயங்களை கூறுகின்றன. விடுதலை போரின் ஆரம்பம் முதல் இந்த கணம் வரை நீக்கமற நிற்கும் துரோகங்களும், காட்டி கொடுப்புகளும், மாற்று கருத்து எதனையும் தாங்காது சகிப்புத்தன்மை அற்று வேரறுக்கும் நிகழ்வுகளும், எனக்குள் சினத்தையும் , மீண்டும், மீண்டும் எழுதவும் தூண்டுகின்றன

******************************************************
சரிநிகரில் முன்பு கொஞ்ச காலம் தொடர்ந்து எழுதிய பின் நீண்ட இடைவெளியின் பின் யாழ் இணையத்தின் மிக சிலவற்றை எழுதினேன். சரிநிகரில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் பெரும் வேறு பாடு என் கருத்திலும், அரசியலிலும், பயன்படுத்தும் மொழியிலும் இருப்பதாகவே உணருகின்றேன். இந்த 8 வருட இடைவெளியில் எனக்குள்ளும், எனக்கு வெளியேயும் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் இந்த வேறுபாட்டை நிகழ்த்தின....

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாகவா அசைகின்றது...?