Thursday, October 23, 2014

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு

வயல் வெளி தோறும்
என் தலைவனின்
காலடிச் சுவடு தேடி
ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு
கேட்கின்றதா உங்களுக்கு?

தன் தலையை மண்ணில்
மோதி அலறி
அழுகின்றது
அது
முழுச் சிறகும் உதிர்த்து
ஒற்றைக் காலில்
தவம் இருக்கின்றது

அதன் அலறல் கேட்கின்றதா
உங்களுக்கு
அதன் குரலில்
இந்த யுகத்தின் அலறல்
இருக்கின்றது

குருவியின் தனிமையில்
காலம் உறைகின்றது
உறைந்த காலத்தில்
நாம் சிதைவுற்றிருந்தோம்

ஆட்காட்டி குருவி கூட
காட்ட ஆளின்றி
ஊர் முழுதும்
சுற்றி வந்து
அழுகின்றதாம்

அது முன்னர்
வீரர்களின் கல்லறையில்
இருந்து பாடி
தூங்க வைத்தது

மூத்த மகனை போருக்கு
இழந்த தாயின் அருகிருந்து
கண்ணீர் துடைத்து
ஆறுதல் கொடுத்தது

வீட்டின் முகப்பில்
இருந்து ஊரை தூங்க
வைக்க தாலாட்டும்
பாடியிருந்தது

இன்று ஆட்காட்ட அதுக்கு
தோழர் இல்லை
இளைப்பாற
போராளியின் தோளில்லை
பறந்து பாட்டுப் பாட
வான் வெளி
இல்லை
புரண்டு சாக
ஒரு மண் கூட இல்லை

ஏன் இப்படி ஆனது
என்று சொல்ல
யாருமில்லை அதுக்கு

ஆட்காட்டி
யாருமற்ற தனிமையில்
வெளிகள் தோறும்
கண்ணீரை எழுதிச் செல்கின்றது

ஆட்காட்டியின்
வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது
-----------

: நிழலி: 12-Aug-2009
இரவு: 10:25 

No comments: