Friday, October 24, 2014

மரணத்தில் தொடங்கும் காலை

எனது காலை மரணம்
பற்றிய செய்திகளில்
விடிகின்றது
நாள் முழுதும்
அவலத்தின் கூக்குரல்

எனது கண்களை
ஆயிரம் கைகளால்
பொத்தி விடுங்கள்
என் காதுகளை
அறுப்பதற்காய்
வாட்களை கொண்டு வாருங்கள்
என்னை நான் ஒளிப்பதற்கு
பாதாளங்களை
திறந்து விடுங்கள்

இறந்த குழந்தையின்
தலையை வருடி விடுகின்றாள் தாய்
சிதைந்த மகனின் உடலை
அள்ளி கொள்கின்றான் தந்தை
நொடியில் அழிந்து போன
தன் அம்மாவின்
கைகளை பற்றிக் கொள்கின்றான்
ஒரு சிறுவன்

வேண்டாம்
இவை எதையும் எனக்கு
இனி சொல்லாதீர்கள்

ஒற்றைச் கையில்
தாயின் கபாலம் ஏந்தி
ஒரு குழந்தை
கனவில் வருகின்றது
என் கோப்பையில்
போடும் உணவில்
பிஞ்சு ஒன்றின்
இரத்தம் கசிகின்றது

வெட்ட வெளியில்
தூரத்தே தெரிகின்ற
ஒரு புள்ளியிலும்
சவ ஊர்வலத்தினை
காணுகின்றேன்
பாடையை கூட பிணங்கள்
தான் காவுகின்றன

படுக்க போன பின்
தலை மாட்டில்
இருந்து மூன்று பிள்ளைகளை
இழந்த அப்பன் ஒருவன்
சத்தமின்றி அழுகின்றான்

மீண்டும் சொல்கின்றேன்
இனி நான்
இவற்றை கேட்கப்
போவது இல்லை

சத்தம் வரும்
எல்லா திசைகளையும்
நான் அடைத்து விட்டேன்
கண் பார்க்கும் எல்லா
உருவங்களிலும்
இருளை சாத்தி விட்டேன்
ஒரு சிறு
செய்தியைத் தானும் நான்
கேட்க போவதில்லை

யுகங்களின் பின்
ஊழி முடிய தேவன்
வருவானாம்
அண்ட சராசங்களின்
வல்லமை கொண்டு
அவன் வருகையில்
மரித்து போன எம்
பிள்ளைகள் அனைத்தும்
எழுந்து கொள்வார்களாம்

அது வரை காத்திருக்கின்றேன்
இறுக்கி வைத்த மூச்சை
யுகங்களின் பின்னே
மீண்டும் விட காத்திருக்கின்றேன்

-நிழலி-

(22-January-2009 10:11 PM)

No comments: