Tuesday, December 30, 2008

நான் வாசித்த, வாசிக்கும் புத்தகங்களும் நாவல்களும் 2

1. லியோ டால்ஸ்டாய் எழுதிய உன்னத நாவல் ``போரும் அமைதியும்``(War and Peace by Leo Tolstoy)

(ரஷிய நாவல். டி. எஸ் சொக்கலிங்கம் அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டு சீதை பதிப்பகத்தால் (தமிழ் நாடு) 3 பெரும் பாகங்களாக வெளியிடப் பட்டது. பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து நான் வாங்கினேன்)

உலகின் முக்கிய முதல் 100 நாவல்களுக்குள் இடம்பெறுகின்ற நாவல் இது. போர் பற்றியும் அதன் அரசியல் இராணுவ பரிமாணங்கள் பற்றியும் மிக ஆழமாக பேசுகின்றது. இதில் நான் ஆச்சரியப் படும் விடயம் என்னவென்றால் சில போர் காட்சிகளும் போரியல் முறைகளும் இன்று வன்னியில் இடம்பெறும் யுத்ததினை அப்பட்டமாக நினைவூட்டுவதே

அலெக்ஸான்டருக்கும் நெப்போலியனுக்கும் இடையிலான போர்தான் முக்கிய கருப்பொருள். அதனை பல பாத்திரங்களுனூடாக டால்ஸ்டாய் நகர்த்தி செல்கின்றார்.எனக்கு அதில் வரும் சில கதா பாத்திரங்கள் நான் வாழும் வரை மறக்க முடியாத நபர்களாக என் மனதில் இருப்பர். பீயர் எனும் பாத்திரமும் நடாஷா எனும் பாத்திரமும் தான் இக் கதையின் முக்கிய மனிதர்கள். இவர்கள் வெறும் கற்பனை கதாப் பாத்திரங்கள் அல்ல. டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் சந்தித்த மனிதர்களில் இருந்தும் தன் உறவினர்களிடம் இருந்தும் சில குணாதிசயங்களை கொண்டும் தன் பாத்திரங்களை வடிவமைத்துள்ளார்

யுத்தம் என்பது என்ன? ஒரு யுத்ததினை தவிர்க்க கூடிய ஆயிரம் வழிமுறைகள் இருந்தும் அது ஏன் தவிர்க்க பட முடியாததாகின்றது. அதில் தனி மனிதர்களின் (தலைவர்களின்) சில விசேட குணாம்சங்கள் எப்படி செல்வாக்கு செலுத்துகின்றது, அவர்கள் காலத்தாலும் அக் காலகட்டத்தில் வாழும் மக்கள் கூட்டத்தாலும் எப்படி உருவாக்கப் படுகின்றனர். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று இரு சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கல் ஒரு நீண்ட வரலாற்று பின்னனியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். அது போலத்தான் அதன் முடிவும்... டால்ச்ஸ்டாய் யுத்தம் ஒன்றின் பல பரிமாணங்களையும் ஆழமாக நோக்குகின்றார்..

போரும் அமைதியும் நாவல் போர் பற்றிய ஒரு பெரும் நாவலாக மட்டும் அன்றி, 1800 களில் இடம்பெற்ற அய்ரோப்பிய யுத்ததினை பற்றிய விமர்சன பார்வை கொண்ட ஒருவரலாற்று பதிவாக கூட அமைத்திருக்கின்றது. நெப்போலியனதும், அலெக்ஸ்சாண்டரினதும் இடையிலான யுத்தம் ஏன் இடம்பெற்றது, எப்படி இடம்பெற்றது என முன்பு எழுதிய பல ஆய்வாளர்களினது, வரலாற்றாசிரியர்களினது கண்டுபிடிப்புகளையும், அவர்களினது விமர்சனங்களையும் மீள் பார்வைக்குட்படுத்துகின்றது, டால்ஸ்டாயின் புதிய விமர்சனங்களே பிற்காலத்தில் பல வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது முக்கியமான விடயம்.

போரும் அமைதியும் வெறும் யுத்தம் பற்றிய ஒரு நாவல் அல்ல. அது பொதுவாக மனிதர்களின் பல்வேறுபட்ட குணாதிசயங்களை, உணர்ச்சிகளை, மனவோட்டங்களை எந்த 'புனித' பார்வைகளும் இன்றி மிக துல்லியமாக டால்ஸ்டாயால் காட்டப்படுகின்ற ஒரு காவியம். இன் நாவலின் பல கதாபாத்திரங்களின் செயல்களும் எண்ணங்களும் ஒவ்வொரு வாசகரும் 'டால்ஸ்டாய் எப்படி எனது உணர்வுகளை கூட எழிதினார்' என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருப்பது தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு பெண்ணிலும் டால்ஸ்டாயின் பாத்திரங்களான "நடாஷாவும்' 'கெலனும்' கலந்து இருப்பர். அதே போன்று ஒவ்வொரு ஆணிலும் 'பீயரும்' , 'அன்றுவும்' கலந்து இருப்பர். நான் முதல் சொன்னது போல நான் சாகும் வரைக்கும் இவர்களின் நினைவு என்னில் கலந்தே இருக்கும். இவர்கள் எனது ஊரிலிருந்து பல்லாயிரக் கணக்கான கிலோ மீற்றருக்கு அப்பால், இரு நூற்றாண்டின் முன் வாழ்ந்தவர்களாயினும் அவர்களில் என்னை கூட ( அல்லது எந்த வாசகனையும்) காணமுடிகின்றது என்பதே இந் நாவலின் சர்வதேசிய தன்மையும் வெற்றியும்போரும் அமைதியும் பற்றிய என் குறிப்பு நிறைவடைகின்றது

சில தகவல்கள்இணையத்தில் ஆங்கில மொழியில் வாசிக்க: http://www.online-literature.com/tolstoy/war_and_peace/இன் நாவலை பற்றிய Wiki பக்கம்: http://en.wikipedia.org/wiki/War_and_Peace

*******************************இவ் நாவலை முடிந்தால் நீங்களும் படித்து பாருங்கள். இன்று எம் மண்ணில் நடக்கும் யுத்ததிற்கும், புலிகளால் காட்டப்படும் 'பொறுமை' க்கும் கூட இதில் பெரும் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இவ் நாவல் அதனால் மட்டுமே வாசிக்க வேண்டிய நாவலாக அமைந்து விடவில்லை. அதில் வரும் பாத்திரங்கள், அவர்களின் மனவோட்டங்கள் எந்தளவுக்கு ஒவ்வொரு மனிதரிலும், உங்களிலும் பிரதிபலிப்பதை காண முடியும். பல சிக்கலான வாழ்வின் துயர் மிகு சம்பவங்களினையும், சந்தோசமான தருணங்களையும் அடி ஆழம் வரை அலசக்கூடிய ஒரு பார்வையின் தொடக்க புள்ளியை இன் நாவல் உங்களுக்கு நிச்சயம் தரும்

No comments: