Thursday, October 23, 2014

சொல் அப்பா சொல்

வெள்ளை பனி உருகி
வீட்டின் முன் வழிகின்றது
வளைந்து செல்லும் வீதியெங்கும்
பனியின் சிதறல்கள்
காற்றின் திசையெங்கும்
குளிரின் வாசம்

பனி பார்க்க விரும்பும்
மகனை கூட்டிச்
சென்று காட்டுகிறேன்
குவியலாக இருக்கும்
பனிக்குள் குளித்தெழும்புகிறான்
சறுக்கி வீழ்ந்து சிரித்து
எழும்புகிறான்
வெண் நுரை அள்ளி
வீசி விளையாடுகிறான்

இப்படித் தானே அப்பா நீயும்

ஊர் முழுதும் மழை
நிரம்புகையில்
சைக்கிளில் என்னை வைத்து
வெள்ளம் காட்டுவதும்
மழையில் நனைவதின் சுகமும்
வெள்ளத்தை கூறு கிழித்து
சைக்கிள் ஓட்டுவதன்
பரவசமும் அப்பா
நீ காட்டியது தானே
எனக்கும்

பின்பு
பனை வெளிகளினூடு போகையிலும்
மலைக் குன்றுகளினூடு நடக்கையிலும்
நீர் வெளிகள் தோறும் கூட்டிச் செல்கையிலும்
உன் விரல்களுடன் என்
விரல்களை இறுக
பிணைந்து கொள்வாய்
யமனால் கூட
பிரிக்க முடியாது நம்
விரல்களை

ஆயினும் அப்பா
என்று உன் விரல்களை
நான் பிரித்தெடுத்தேன்?

என்னையும் உன்னைபோல் ஆணாக
புரியும் போதா
உன் விரல்களை
நான் பிரித்தேன்?
அல்லது
அப்பாக்களுக்கும்
மகன்களுக்குமான
பெரும் இடை வெளியிலா
உன்னை தொலைத்தேன்

உன்னில் இருந்து என்னை
பிரிக்கையில்
உன் விரல்களின் நோவை
நான் அறியவில்லை
உன் மனதின் ஓரத்தில்
இருந்த கண்ணீரின் துளிகளை தானும்
நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா
என்பதில் கூட எனக்கு
அக்கறை இருக்கவில்லை

ஒவ்வொரு முறையும்
நான் வீழ்கையில்
தூக்கிவிட்ட உன்
தோள்களை கூட நான்
மறந்து இருந்தேன்
என் காதல் தோற்று
நான் உடைந்திருக்கையில்
மெளனமாக என்னை
அடை காத்ததை கூட
விரும்பாது இருந்தேன்

இன்று
என் மகனை கொஞ்சுகையிலும்
அவனின் மொழியை காண்கையிலும்
உன் ஞாபகம் ஏன் வருகின்றது..
அவனது சின்ன
தவறுகளை திருத்துகையில்
எப்படி உன் மொழி
என் நாவில் ஒட்டியது
சில வேளைகளில்
என் குரலில் கூட
உன் சொற்களின்
வாசம் எப்படி
வருகின்றது

உன்னை கொடும் நோயில்
பார்த்த நிமிடங்களில்
வராத அழுகையும்
உனக்கு சிதை மூட்டுகையில்
எழாத பெரும் துயரமும்
எப்படி
இப்போது மட்டும் எனக்கு
வருகின்றது

சொல் அப்பா சொல்

யுகம் யுகமாய் தொடரும்
அப்பன் மகன் உறவின்
எல்லாக் கண்ணிகளும்
இப்படித் தானா இருக்கும்

நீ கூட இப்படியா
உன் அப்பாவையும்
எல்லாம் முடிந்த பின்
உணர்ந்து கொண்டாய்
என்று சொல்

எனது மகனாவது
இதன் நுட்பத்தை புரிந்து
கொள்ளட்டும்
எனது இன்றைய
தவிப்பு அவனுக்கும்
வராது போகட்டும்

சொல் அப்பா சொல்

-நிழலி--

December 31, 2008

நானும் அப்பா எனும் ஆணும் 01

திமிர் ஏறிக் களைத்த
நரம்புகளுக்கிடையே
இன்னும் மிச்சமிருக்கின்றது
அப்பாவுக்காக அழும்
சில கண்ணீர் துளிகள்

வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே
அப்பாவின் விரல் பற்றி
இன்னொரு பயணம் செல்ல
காத்து தவிக்கின்றன
என் விரல்கள்

அப்பா பற்றிய நினைவுகளில்
எல்லாம் குரோதம் படரவிட்ட
ஒரு மாலைப்பொழுதில் தான்
அவரை
இழந்திருந்தேன்

*************************
2.

ஆண் உணர்வு புடைத்து
நிமிர்ந்து தலை தெறிக்க
ஓடும் போது அறுந்த முதல்
முதல் நாடி
என் அப்பாவுடனான நேசம்

அவரது ஒவ்வொரு
சொல்லிற்கும் எதிராக
நீண்டு முழங்கி ஓங்காரமாக
அறைந்தது என் ஆண்
மெளனம்

என் மெளனத்திற்கு
பதில் சொன்ன அவரது
ஒவ்வொரு
விடைகளிலும் தெறித்து
விழுந்தது ஆண் எனும்
மிருகத்தின் இரை தேடும்
குரோதம்

எனக்கும் அவருக்குமான
அனைத்து பிணைப்புகளிலும்
ஆண் திமிர் தன்
வெறுப்பு களிம்பை பூசிச் சென்றது

இரக்கமற்ற கூர் கொண்ட
இரு
கத்திகள் ஒன்றுடன் ஒன்று
உரசாமல் உறைக்குள்
இருப்பதில்லை


************

3.

செத்துப் போன அப்பாவின்
நிர்வாண உடலை
மலர்சாலையில் கண்ட
நொடியில்
எல்லா பதில்களும்
எனக்கு கிடைத்தன

என்னை பிறப்பித்த அவரது
ஆண் குறி
சலனமற்றுக் கிடந்தது

என்னை கைபிடித்து கூட்டிச் சென்ற
விரல்கள்
நீட்டி நிமிர்ந்து அசைவற்றுக்
கிடந்தன

தன்னை பின் தொடரச் சொன்ன
பாதங்கள்
விறைத்து கிடந்தன

என் போக்கில் சலிப்புற்று
பேசிய உதடுகள்
எனக்கு இறுதியாக சொல்ல
எத்தனித்த சொற்களை
அடைகாத்து வரண்டு கிடந்தன

************

எல்லாம் முடிந்து
அவர் எலும்புகளை எண்ணி
கடலில் கரைத்த மாலையின்
பின்னிரவில் என்
மனைவி சொன்னாள்

என் மகன் தன் வயிற்றில்
முதல் தடவையாக
உதைக்கின்றான் என


:நிழலி
17 June 2012

நிலவின் வருகை:

ஒரு இரவின் இடையில்
உயிரின் கலசம்
உடைந்தது

உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின்
உச்சத்தில் அவளை
இறுகத் தழுவினேன்
இறுக்கி அணைத்தேன்
முத்தமிடா இடங்களை
காதலின் உச்ச
வரிகள் நிரப்பிச் சென்றன

யுகங்களுக்கு அப்பால்
இருந்து கால பைரவன்
உயிரின் துளிகளை
சுமந்து என்னிடம் தந்தான்
என் தேவதையின்
காதல் இடைவெளியை
அந்த உயிர் துளிகளால்
நிரப்பினேன்

ஒரு மொட்டின்
அசைவை தன்னில்
என் தேவதை
எனக்குச் சொன்னாள்

ஆயிரம் கலவிகள்
கடந்த வீரத்தையும்
தன் நீந்தலையும்
என்னுள்
என் ஆண்மை
தன்னைப் பற்றி
வாய் வலிக்கச் சொன்னது

2

அந்த அறை எனக்கு
கருவறை

அந்த அறையில்
ஒரு உயிரின்
வருகைக்காய்
காத்திருந்தேன்

என் தாய் எனைப்
பெற்ற யோனி
வலி
நான் கண்டேன்

வார்த்தைகள் அற்றுப்
போகின
வாக்கியங்கள் தன்
ஆளுமை இழந்தன
எல்லா மொழியும்
தன் இருப்பை
தொலைத்தன

காலம் என்னை விட்டு
தானே கழன்று
கொள்வதாய்
நான் உணர்தேன்

பல யுகங்கள்
நீரின்றி
தாகம் கொண்ட
மானுடன் அலைந்த
உயிர் வற்றும்
தாகம்
நான் கொண்டேன்

எப்போது உயிரின்
இசை நான் கேட்பேன்

3

ஒரு கண இடைவெளியில்
நிலவின் வருகை
அமைந்திருந்தது

கீச்சுக் குரல்
கொண்ட அழுகை
என் வாழ்வின்
இடைவெளிகளை
நிரப்பியது

கால பைரவன்
சிரித்துக் கொண்டான்
யுகம் யுகமாய்
உனக்காக சேமித்த
நிலவு இது
என்று சொல்லிச்
சென்றான்

சின்ன நிலவு
விழி திறக்கையில்
என் உயிர்வாழ்தலின்
வலி இன்புற்றது
முதல் தொடுகையில்
விழிகள் கண்ணீரை
உதிர்த்தது
ஆயிரம் ஆண்டுகால
வாழ்வின் சுமை
விடுபட்டது

என் தேவதை
தந்த நிலவு
என் இருட்டினை
கடந்து செல்கின்றது

என்
தேவதையை திரும்பிப்
பார்கின்றேன்
கேட்காத அற்புத
இசையை அவள்
கண்களால்
சொல்லிக் கொண்டாள்
அதில் அவள்
காட்டாத உச்சபட்ச
காதல் நிரம்பியிருந்ததை
நான் அறிந்தேன்

ஒரு இரவின் இடையில்
உடைந்த கலசம்
நிலவாக பிரவாகித்து
ஓடியது
ஆண் பெண்
உறவின் நதி
இன்னொரு
நாகரீகத்தை
தோற்றுவித்துக்
கொண்டது

: நிழலி

(நவம்பர் 14, 2009 இரவு அன்று என் மகள் பிறக்கும் போது அருகிருந்த உணர்வின் பாற்பட்டு எழுதிய கவிதை. என்னால் மீள் திருத்தம் ஒரு போதும் செய்யப்பட மாட்டாத ஒரு உணர்வுக் கவிதை)
எழுதியது: நவம்பர் 18, இரவு 11:00

மனிதனும் பாம்பும்

பாம்பு !!
உடைப்பெடுத்த ஆற்றைப் போல்
பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன்
என் முன்னே
ஆடியது

வரிகள் எல்லாம்
அதன் தோலாக
தோலெல்லாம் அதன்
வரிகளாக
நெளிந்து நெளிந்து
சீறிக் கொண்டே
ஆர்ப்பரித்தது

இதிகாசங்கள் தம்மை
ஏமாற்றிய தவிப்பு
ஒரு கண்ணில்,
ஆயிரம் ஆயிரம் ஆண்டு
கடந்தும் மனிதன் மீது
மாறா வெஞ்சினம்
அதன் மறு
கண்ணில்

தனக்கும் மனிசனுக்குமான
தீர்க்க முடியா
கணக்கை பாம்பு
சொல்லியது
ஒவ்வொரு வரியிலும்
மனிதன் பெயர் வரும்போது
வெறுப்புடன் துப்பியது

பாம்பின் கால்கள் எல்லாம்
நியாயம் கேட்டு
வரலாறு முழுதும்
நடந்து நடந்தே
அழிந்து போனதாம்...
அதன் காதுகள்
மனிதனின் பம்மாத்து
வாக்குறுதிகளால் அறுந்து
விழுந்ததாம்

ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும்
பொய் பழி தீர்க்க
அது ஒவ்வொரு மாதத்திலும்
தோலுரித்து தவம் புரியுமாம்

வருடத்துக்கு ஒரு முறை
இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில்
மண்டி இட்டு அவரின்
காம இச்சைக்கான
பாவத்துக்காக
சிலுவை சுமக்குமாம்

தேவர்களுக்காக
தன்னை மத்தாக்கி
கடைந்த பெருங் கள்வன்
சிவனின் உடலெங்கும் இருந்த
விசத்தை தன் பல்லில்
தேக்கிய துயர் தீர்க்க
இரவில் மட்டுமெ கலவி கொண்டு
இரத்தினக் கல்லெடுத்து
வழிபடுமாம்

கண்கொத்தி பாம்பாய் மாறி
கண்களை கொய்து
சிவன் எனும் அற்பனுக்கு
அபிசேகம் செய்யுமாம்

நாகமென்று,
சாரை என்று
புடையன் என்று,
கண்கொத்தி என்று
கட்டு விரியன் என்று
கண்ணாடி விரியன் என்று
மண்ணுணி என்று
கொம்பேறி மூக்கன் என்று
சுருட்டை என்று
பச்சை என்று
ஆயிரம் பேர் சொல்லி அழைக்கினும்
....
தன்னை
பாவத்தின் சாபமாய்
சாபத்தின் பலனாய்
பலனில் வரும் துயராய்
துயரில் வரும் வெறுப்பாய்
ஈற்றில்
வெறுப்பில் வரும் வழிபாட்டாய்
மட்டுமே மனிதன்
வழிபடுகின்றானாம்


பல இரவு கடந்தும்
தூங்காத என்
இரவு ஒன்றில்
வந்த பாம்பு
தன் கதையை
சொல்லி புலம்பிற்று

****************

என் முடிவுறா இராக் காலத்தின்
இறுதியில் அடிக்கடி
ஒரு
பாம்பு வரும்

செதில் உதிர்த்து
விடம் கொண்டு
படம் காட்டி
ஒரு பெரு நாகம்
கனவில்
பீறிட்டு எழும்

என் கனவுகளின் மேல்
ஊர்ந்து போகும்
உணர்வுகளில்
விடம் தடவும்
நினைவுகளில் தங்கி
முழு உடல் அனைத்தையும்
நுனி வால் தாங்கி
படம் பிடித்து ஆடும்

இறுதியில் தனக்கும்
மனிசனுக்கும் இடையிலான
தீர்க்காத கணக்கை
விடம் கொண்டு
தாக்கி
சொல்லிச் செல்லும்

******************
அடுத்த நாள்
காலை நான்
ஆலகால நஞ்சுண்டவனாய்
விழித்தெழுவேன்



:நிழலி: ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா)